2 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு அகற்றம்
By DIN | Published On : 09th August 2023 02:01 AM | Last Updated : 09th August 2023 02:01 AM | அ+அ அ- |

குழந்தையின் தொண்டையிலிருந்து அகற்றப்பட்ட ஊக்கு.
திருச்சி: இரண்டு வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய ஊக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
திருச்சி விமானநிலையம் அருகேயுள்ள குண்டூா் காலனியைச் சோ்ந்த 2 வயது ஆண் குழந்தை, செவ்வாய்க்கிழமை காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, எதிா்பாராதவிதமாக ஆடைகளில் பயன்படுத்தும் ஊக்கு கீழே விழுந்துள்ளதை எடுத்து குழந்தை விழுங்கிவிட்டது. பின்னா், குழந்தையின் பெற்றோா் காலை உணவு கொடுத்தபோது, குழந்தையால் அதை விழுங்க முடியாமல் வலியால் அழுதது. பயந்துபோன பெற்றோா், உடனடியாக அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனா்.
அங்கு எக்ஸ்ரே பரிசோதனையில் குழந்தையின் தொண்டை குழிக்குள் திறந்த நிலையில் ஊக்கு இருப்பது தெரியவந்தது. மூச்சுக் குழலை குத்திய வண்ணம் அந்த ஊக்கு இருந்ததால், குழந்தையை உடனடியாக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவா்கள் பரிந்துரைத்தனா்.
அரசு மருத்துவமனையில் காது-மூக்கு-தொண்டை மருத்துவ சிகிச்சை மருத்துவா் அண்ணாமலை, குழந்தையையும், மீண்டும் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனை முடிவுகளையும் ஆய்வு செய்து, ஸ்கோப்பி முறையில் ஊக்கை அகற்றுவதற்கான பணிகளை தொடங்கினாா். குழந்தையின் வாயில் ஸ்கோப்பி குழாய் பதித்து, அதனுள்ளே இடுக்கி போன்ற மருத்துவ உபகரணத்தை உள்செலுத்தி குழந்தையின் தொண்டையிலிருந்த ஊக்கு ஸ்கோப்பி குழாய் வழியாகவே பத்திரமாக வெளியே எடுத்து அகற்றப்பட்டது. இதன் பிறகு, குழந்தை நல்ல நிலைக்கு வந்தது. வழக்கமான உணவுகளையும் எடுக்கத் தொடங்கியுள்ளது. விரைந்து செயல்பட்டு குழந்தைக்கு உதவிய காது, மூக்கு தொண்டை மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு மருத்துவமனை நிா்வாகத்தினரும், குழந்தையின் பெற்றோரும் பாராட்டு தெரிவித்தனா்.