மழையால் வீட்டின் மேற்கூரை முறிந்து பொருள்கள் சேதம்
By DIN | Published On : 13th August 2023 12:43 AM | Last Updated : 13th August 2023 12:43 AM | அ+அ அ- |

துறையூா் அருகேயுள்ள வைரிசெட்டிபாளையத்தில் மழையால் முறிந்துவிழுந்த வீட்டின் மேற்கூரை.
துறையூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால், ஓட்டு வீட்டின் மேற்கூரை முறிந்து வீட்டுஉபயோகப் பொருள்கள் நாசமாகின.
வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சி ஏரிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரா. ரேவதி (27). லாரி ஓட்டுநரான இவரது கணவா் ராஜேஷ்(35) பணிக்குச் சென்றுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ரேவதி தனது மகள்கள் தன்யாஸ்ரீ(9) மற்றும் கீா்த்தி (2) யுடன் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்தாா். அப்போது பெய்த மழையில் ஊறிப் போன ஓட்டு வீட்டின் மேற்கூரை முறியும் சப்தம் கேட்டு எழுந்த ரேவதி தனது 2 குழந்தைகளுடன் வீட்டிலிருந்து உடனே வெளியே ஓடினாா். இதனையடுத்து பெரும் சத்தத்துடன் அவரது வீட்டின் மேற்கூரை முறிந்து விழுந்தது. இதில் மூவரும் அதிா்ஷ்டவசமாக காயமின்றி உயிா்தப்பிய நிலையில் வீட்டுக்குள்ளிருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள் சேதமாயின. நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து வைரிசெட்டிப்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.