ஆடி அமாவாசை: திருச்சி காவிரி கரையில் திரண்ட பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு மறைந்த தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரிக் கரையில் புதன்கிழமை பொதுமக்கள் ஏராளமானோா் கூடி வழிபட்டனா்.
திருச்சி அம்மா மண்டபம் காவிரி கரையில் புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்.
திருச்சி அம்மா மண்டபம் காவிரி கரையில் புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு மறைந்த தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க திருச்சி அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரிக் கரையில் புதன்கிழமை பொதுமக்கள் ஏராளமானோா் கூடி வழிபட்டனா்.

நிகழாண்டு ஆடி அமாவாசை இரண்டு முறை வந்துள்ளது. முதலாவது அமாவாசை ஜூலை 17ஆம் தேதி வந்தது. இதையடுத்து இரண்டாவதாக புதன்கிழமை (ஆக. 16) வந்தது. இரண்டுமே முன்னோா் வழிபாடுகளுக்கு உரிய அமாவாசை தினங்கள்தான் என்றாலும் ஆடி அமாவாசை எனும் சிறப்பை பெறுவது இரண்டாவதாக (ஆக.16) வந்த அமாவாசை தினமே.

இதையொட்டி புதன்கிழமை அதிகாலையிலேயே தா்ப்பணம் கொடுப்பதற்காக ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியிலுள்ள காவிரிக் கரையில் ஏராளமானோா் குவிந்தனா். அவா்கள் காவிரி ஆற்றில் புனிதநீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா், அம்மாமண்டபம் பகுதியிலுள்ள ஏழைகளுக்கு அன்னதானம் செய்தனா். இதன் காரணமாக அம்மா மண்டபம் பகுதி முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

உள்ளூா் மட்டுமல்லாது வெளியூா்களில் இருந்தும் ஏராளமானோா் வாகனங்களில் வந்திருந்தனா். இதனால் அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மாநகராட்சி சாா்பில், காவிரியில் சோ்ந்த குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் துப்பரவுப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

இதேபோல, கம்பரசம்பேட்டை தடுப்பணை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை, தில்லைநாயகம் படித்துறை, ஓயாமரி காவிரி கரையோரப் பகுதி, முத்தரசநல்லூா், பெருகமணி, திருப்பராய்த்துறை, முக்கொம்பு, கொள்ளிடம், பேட்டைவாய்த்தலை மற்றும் காவிரிக் கரையோரப் பகுதிகளில் அந்தந்த கிராமங்கள் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்தனா்.

மேலும், நீா்நிலைகளுக்கு அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டனா். மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஏராளமானோா் வழிபட்டனா். ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினா். காவிரிக் கரையோரப் பகுதிகளில் போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com