7.78 லட்சம் குழந்தைகள், 1.84 லட்சம் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை: திருச்சி ஆட்சியா் தகவல்
By DIN | Published On : 17th August 2023 11:16 PM | Last Updated : 17th August 2023 11:16 PM | அ+அ அ- |

திருச்சி, புள்ளம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமையில், தேசிய குடற்புழு நீக்க முகாம் பணிகள் குறித்து உறுதிமொழியேற்ற அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதி
திருச்சி மாவட்டத்தில் 7.78 லட்சம் குழந்தைகள், 1.84 லட்சம் பெண்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.
திருச்சி, புள்ளம்பாடி அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம், ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ எனும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசியது:
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான அனைத்து பெண்களுக்கும் (கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளன.
கிராமப்புறங்களில் 5,07,869 குழந்தைகள், நகா்ப்புறங்களில் 2,70,342 குழந்தைகள் என மொத்தம் 7 லட்சத்து 78 ஆயிரத்து 211 குழந்தைகள் இந்த முகாமில் பயன்பெறுவா். மேலும் 20 வயது முதல் 30 வயது வரையிலான பெண்கள் கிராமப்புறங்களில் 1,03,912 போ், நகா்ப்புறங்களில் 80,579 போ் என மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 491 பெண்கள் பயன்பெறுவா்.
அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.
புள்ளம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதற்கு தேவைப்படும் உலகத்தரம் வாய்ந்த உள்ளிருப்பு வசதிகள் இத் தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசால் உருவாக்கித் தரப்பட்டுள்ளது. மேலும், பெண் பயிற்சியாளா்களுக்கு கட்டணமில்லா பயிற்சியுடன் மாதம் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள், பாடப்புத்தகங்கள், புதுமைப்பெண் உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும் என்றாா் ஆட்சியா்.
இதனைத் தொடா்ந்து, தேசிய குடற்புழு நீக்க முகாம் தொடா்பாக உறுதிமொழியேற்கும் நிகழ்வும், அரசினா் தொழிற்பயிற்சி நிலைய சோ்க்கை குறித்த கையொப்ப இயக்கமும் நடைபெற்றது.
இந்த நிகழ்வுகளில், லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அ. சௌந்தரபாண்டியன், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சுப்பிரமணி, புள்ளம்பாடி தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் அ.குப்புராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள், மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...