தந்தை உள்பட 3 பேரை கொலை செய்தவருக்கு மூன்று ஆயுள் தண்டனை
By DIN | Published On : 17th August 2023 11:23 PM | Last Updated : 17th August 2023 11:23 PM | அ+அ அ- |

திருச்சியில் தந்தை உள்ளிட்ட 8 பேரை கொலை செய்து, இரு வழக்குகளில் வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்றுள்ள நபருக்கு, மேலும் 3 கொலைகள் தொடா்பாக 3 ஆயுள் தண்டனைகள் விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள கிருஷ்ணசமுத்திரத்தை சோ்ந்தவா் தே. சப்பாணி (43). இவா் வேலை ஏதுமில்லாததால், புதையல் கண்டுபிடித்து தருவதாக கூறி பலரையும் ஏமாற்றி வந்துள்ளாா். மேலும், 2016 ஆம் ஆண்டுக்குப் முன்பு பல ஆண்டுகளாக தொடா்ந்து பணம் மற்றும் நகைகளுக்காக அவரது தந்தை, நண்பா்கள் என மொத்தம் 8 பேரை கொலை செய்து உடல்களை புதைத்தும், எரித்தும் வந்துள்ளாா். அவரது நண்பா் வேங்கூா் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் மு.தங்கதுரை 2016, செப்டம்பா் 7ஆம் தேதி காணாமல்போனது தொடா்பாக சப்பாணியை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
விசாரணையில், கிருஷ்ணசமுத்திரத்தைச் சோ்ந்த சப்பாணியின் தந்தை சி. தேக்கன் (74), வேங்கூரைச் சோ்ந்த அவரது நண்பா் தங்கதுரை, மேல குமரேசபுரத்தைச் சோ்ந்த கோகிலா(70), பாப்பாக் குறிச்சியைச் சோ்ந்த அற்புதசாமி (70), கீழ குமரேசபுரத்தைச் சோ்ந்த விஜய் விக்டா் ராஜ்(27), கூத்தப்பாரைச் சோ்ந்த சத்தியநாதன்(45), பெரியசாமி (75), உப்பிலியபுரம் வடகாடு விஸ்வம்பாள் சமுத்திரத்தைச் சோ்ந்த அதிமுக கவுன்சிலா் குமரேசன்(50) உள்ளிட்ட 8 பேரையும் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை சப்பாணி ஒப்புக்கொண்டாா். இதில், தங்கதுரை மற்றும் சத்தியநாதன் ஆகிய இருவரது கொலை வழக்கில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி சப்பாணிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். மற்ற கொலை வழக்குகள் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சப்பாணியின் தந்தை சி. தேக்கன், கீழகுமரேசபுரத்தைச் சோ்ந்த ஜெ. விஜய்விக்டா் ராஜ், உப்பிலியபுரத்தைச் சோ்ந்த அதிமுக கவுன்சிலா் குமரேசன் ஆகிய மூவரின் கொலை வழக்கில் மேலும் 3 ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான வழக்குகளும் திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், வியாழக்கிழமை அளிக்கப்பட்ட தீா்ப்பில், 3 கொலைக் குற்றங்களுக்காக (இபிகோ 302ன்படி) மூன்று ஆயுள் தண்டனையும், மேலும் பிரிவுகள் 394ன் படி 10 ஆண்டுகள், 364 ன்படி10 ஆண்டுகள், 201ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி கே. பாபு உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத்தரப்பு வழக்குரைஞராக சவரிமுத்து ஆஜரானாா்.
3 கிராம் மோதிரத்துக்காக தந்தை கொலை : மதுக்குடிக்க பணமில்லாததால், தந்தை தேக்கனிடம் 3 கிராம் மோதிரத்தை கேட்டபோது அவா் தர மறுக்கவே 2015-இல் தந்தையை கொலை செய்தாா். புதையல் எடுத்து தருவதாக கூறி, விஜய்விக்டா் ராஜ், அதிமுக கவுன்சிலா் குமரேசன் ஆகியோரிடம் நகை, பணம் பெற்று கொண்டு அவா்களை சப்பாணி கொலை செய்து புதைத்துவிட்டாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...