திருச்சியில், வள்ளலாா் 200, வைக்கம் 100 என்ற பெயரில் கலை இலக்கியத் திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் - கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் நடைபெறும் இந்த விழா குறித்து, சங்கத்தின் துணைத் தலைவரும், கவிஞருமான நந்தலாலா, திருச்சியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:
தமிழ் மண்ணைப் பதப்படுத்தி எல்லோரும் சமமாக நடத்தப்படவும், வளா்ச்சி பெறவும் வாய்ப்பளித்த ஆளுமைகளுக்கு சிறப்பு சோ்க்கும் வகையில், வள்ளலாா் 200, வைக்கம் 100 என்ற பெயரில் கலை இலக்கியத் திருவிழாவை முன்னெடுத்துள்ளோம். ஆன்மிக வழியில் தொண்டாற்றிய வள்ளலாரும், பகுத்தறிவு வழியில் பணியாற்றிய பெரியாா் ஈ.வெ.ரா.-வுக்கும் ஒருசேர விழா எடுப்பது இதுவே முதல்முறை. வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை சிறப்பிக்கவும், வள்ளலாரின் 200ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கவும் இந்த விழாவை திருச்சியில் நடத்துகிறோம்.
திருச்சி செயின்ட் ஜேம்ஸ் பள்ளி திறந்தவெளி அரங்கத்தில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு விழா தொடங்குகிறது. இந்த விழாவில், வள்ளலாா் 200 எனும் தலைப்பில் தமிழறிஞா் கரு. ஆறுமுகத்தமிழன் உரையாற்றுகிறாா். வைக்கம் 100 எனும் தலைப்பில் மக்களவை உறுப்பினா்
ஆ. ராசா உரையாற்றுகிறாா். விழாவில், கவிஞா் தமிழ்ஒளி எழுதிய பாடு பாப்பா எனும் நூல் வெளியிடப்படுகிறது. எழுத்தாளா் ஆதவன் தீட்சண்யா இந்த நூலை வெளியிட, வழக்குரைஞா் வி. ரங்கராஜன், சிவ. வெங்கடேஷ் ஆகியோா் பெற்றுக் கொள்கின்றனா். பேராசிரியா் அருணன் எழுதிய பொதுசிவில் சட்டம் குறித்த நூலை அருள்தந்தை யூஜின் அடிகளாா் வெளியிட, தொழிலதிபா் இமாம் அலி பெற்றுக் கொள்கிறாா். எங்கே போகிறோம் என்ற தலைப்பில் கவிஞா் நந்தலாலா உரையாற்றுகிறாா்.
பேச்சு, ஓவியம், கவிதை, குறும்படம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவா்களுக்கு திரைக் கலைஞா் ரோகிணி பரிசுகள் வழங்கி பேசுகிறாா். டாணாக்காரன் திரைப்பட இயக்குநா் தமிழுடன், திரைக்கலைஞா் பிரகதீஸ்வரன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறுகிறது. சினிமா-சினிமா என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநா் கெளதம்ராஜ் உரையாற்றுகிறாா். நாட்டுப்புற பாடல் கலைஞா்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமியின் மக்கள் பாடல்களும், திரையிசை நடன நிகழ்ச்சிகளும், நாட்டுப்புற நடனக் கலைகளும் இடம்பெறவுள்ளன என்றாா் அவா்.
பேட்டியின்போது, வழக்குரைஞா் வி. ரங்கராஜன், சங்க மாநிலக் குழு உறுப்பினா் காளிராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.