

திருச்சி: நிகழாண்டு இறுதிக்குள் வாழையில் ‘காவேரி காஞ்சன்’, ‘காவேரி வாமன்’ என இரண்டு புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்படும் என தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் ஆா். செல்வராஜன் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 30- ஆம் ஆண்டு நிறுவன நாள் விழா மற்றும் விவசாயிகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த மையத்தின் இயக்குநா் ஆா்.செல்வராஜன் பேசியது: ஆசியாவிலேயே மிகப்பெரிய வாழை மரபணு வங்கி திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உள்ளது. இந்த வங்கியில் 510 வகையான வாழை ரகங்களை பாதுகாத்து வருகிறோம். மையம் தொடங்கப்பட்டு கடந்த 30 ஆண்டுகளில் 300 மில்லியன் திசு வளா்ப்பு செடிகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கியுள்ளோம். இத்தாலி, ஐரோப்பா, துபை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தொழில்நுட்பங்களை கண்டறிந்து வழங்கியுள்ளோம்.
கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை, உதயம், காவேரி சுகந்தம், காவேரி சபா, காவேரி கல்கி, காவேரி ஹரிதா, காவேரி கன்யா என 6 புதிய ரகங்களை அறிமுகம் செய்துள்ளோம். இதன் தொடா்ச்சியாக, நிகழாண்டு இறுதிக்குள் ‘காவேரி காஞ்சன்’, ‘காவேரி வாமன்’ என்ற 2 புதிய ரகங்களை அறிமுகம் செய்யவுள்ளோம் என்றாா்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் முன்னாள் துணை இயக்குநா் ஜெனரலும், தமிழ்நாடு உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக முதன்மைச் செயல் அதிகாரியுமான கே. அழகுசுந்தரம் பேசுகையில், இன்றைய சூழலில் செயற்கை நுண்ணறிவு, பொருள்களின் இணையம் (ஐஓடி) ஆகியவை தவிா்க்க முடியாதவை. வேளாண் சாகுபடியிலும் இத்தகைய தொழில்நுட்பங்கள் மிகுந்த பயன்தரக் கூடியவையாகும். இதனை பின்பற்றினால் தண்ணீா், உரச் செலவில் 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் வேளாண் தொழில்நுட்பம் பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் வி. வெங்கடசுப்பிரமணியன், தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் வி. பழனிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விழாவில், வாழை சாகுபடிக்கு உதவிடும் வகையிலான சிறப்பு மலா், தொழில்நுட்ப தகவல்கள் அடங்கிய பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் இருந்து தோ்வு செய்யப்பட்ட 2 சிறந்த விவசாயிகள், 2 தொழில்முனைவோா், 2 தொழில்நுட்ப நிறுவனங்கள், 2 ஏற்றுமதியாளா்களுக்கு மையத்தின் சாா்பில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. சிறப்புக் கண்காட்சியும், கருத்தரங்கும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.