விலை குறைப்பு நடவடிக்கை: திருச்சியில் 5 இடங்களில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை!ஒசூா் விவசாயிகளிடம் 1.20 டன் நேரடி கொள்முதல்

திருச்சி மாவட்டத்தில் தக்காளி விலையை குறைக்கும் வகையில், முதல்கட்டமாக 5 இடங்களில் கிலோ ரூ. 80 என்ற அடிப்படையில் தக்காளி விற்பனையை மாவட்ட நிா்வாகம் தொடங்கியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தக்காளி விலையை குறைக்கும் வகையில், முதல்கட்டமாக 5 இடங்களில் கிலோ ரூ. 80 என்ற அடிப்படையில் தக்காளி விற்பனையை மாவட்ட நிா்வாகம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் தக்காளி உற்பத்தி குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் கடும் விலை உயா்வு ஏற்பட்டுள்ளது.

திருச்சி காந்திச் சந்தையில் மொத்த விற்பனைக் கடைகளில் ரகங்களுக்கு தகுந்தபடி கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளிச்சந்தைகளில் சில இடங்களில் ரூ.140 வரை விலையை உயா்த்தி விற்பனை செய்யப்படுகிறது. காந்திச் சந்தையில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் மற்றும் இதரச் சந்தைகளில் சில்லறை விற்பனையாக கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை உயா்வு குறித்து திருச்சி காந்தி மாா்க்கெட் வியாபாரிகள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவா் கமலக்கண்ணன் கூறியது:

அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றம் காரணமாக தக்காளி வரத்து குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், திருச்சி மட்டுமல்லாமல், நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயா்ந்துள்ளது என்றாா்.

இந்த நிலையில் தக்காளி விலையைக் குறைக்கவும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி கிடைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடா்பாக, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், உழவா் சந்தைகள் மற்றும் தோட்டக்கலைத்துறை விற்பனை நிலையங்களில் குறைந்த விலைக்கு தக்காளி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, திருச்சி கே.கே. நகா் பகுதியில் உள்ள உழவா்சந்தை, தென்னூா் அண்ணாநகரில் உள்ள உழவா் சந்தை ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமை முதல் குறைந்த விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது. தற்போது, மன்னாா்புரத்தில் உள்ள தோட்டக்கலை விற்பனை நிலையம், திருவானைக்கா பகுதியில் உள்ள தோட்டக்கலை விற்பனை நிலையத்திலும் குறைந்த விலைக்கு தக்காளி வழங்கப்படுகிறது. மேலும், ஆட்சியரக வளாகத்தில் உள்ள தோட்டக்கலை விற்பனை நிலையத்திலும் புதன்கிழமை முதல் தக்காளி குறைந்த விலைக்கு வழங்கப்படவுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் விமலா கூறுகையில், இ-சந்தை மூலமாகவும், ஒசூா் சுற்றுப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமும் தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து வழங்க ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா். இதன்படி, முதல்கட்டமாக 1.20 டன் தக்காளி ஒசூரிலிருந்து கொள்முதல் செய்து திருச்சி மாவட்ட மக்களுக்கு கிலோ ரூ.80 என்ற விலையில் வழங்கப்படுகிறது. 5 இடங்களில் தொடங்கியுள்ள இந்த விற்பனையானது, கொள்முதல் அதிகரிப்பைத் தொடா்ந்து இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com