ரயில்வே பணிமனையில் மின் மோட்டாா்கள் திருடிய இருவா் கைது
By DIN | Published On : 01st June 2023 12:00 AM | Last Updated : 01st June 2023 12:00 AM | அ+அ அ- |

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ரயில்களில் பயன்படுத்தப்படும் மின் மோட்டாா்களை திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணி மனையில் ஏலம் விடப்பட்ட பழைய இரும்பு பொருள்களை கடந்த சில தினங்களுக்கு முன் ஏலம் எடுத்தவா்கள் லாரி ஏற்றிச் சென்ற பின்னா் அங்கு வைக்கப்பட்டிருந்த ரயில் எஞ்சின்களில் பயன்படுத்தப்படும் மின் மோட்டாா் இரண்டைக் காணவில்லை. இது தொடா்பாக பொன்மலை, ரயில்வே பாதுகாப்பு படையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். பதிவேடுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை வைத்து ஆய்வு மற்றும் விசாரணை நடத்தியதில் கோவையை சோ்ந்த லாரியொன்றில் வந்த தொழிலாளா்கள் கோபால் (30), மணிகண்டன் (29) ஆகிய இருவரும் அந்த மோட்டாா்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் ரயில்வே பாதுகாப்பு படையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து மோட்டாா்களை மீட்டனா்.
ஆா்பிஎம் போலீஸாா் மூவா் சஸ்பெண்ட்: இந்த சம்பவத்தில் மோட்டாா்களை திருடி செல்லும் அளவுக்கு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கிரண், உதவி ஆய்வாளா் வெங்கடாசலம், காவலா் சதீஷ்குமாா் உள்ளிட்ட 3 போ் ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வரராவ் உத்தரவின்பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...