திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மணியங்குறிச்சியில் உள்ள சுமாா் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
மணியங்குறிச்சியில் மருங்காபுரி ஜமீனுக்கு சொந்தமான சுமாா் 400 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சித்ரா பௌா்ணமி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, தேருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்ற பிறகு மீனாட்சி அம்மன் உற்ஸவ மூா்த்தி வீற்றிருக்க அலங்கரிக்கப்பட்ட தேரை ஜமீன்தாா் ரெங்ககிருஷ்ண குமார விஜய பூச்சைய நாயக்கா் வடம் பிடித்து தர, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா்.
தேரோடும் வீதிகள் வழியாக சென்ற தோ் பின்னா் நிலைமண்டபத்தை அடைந்தது. தேரோட்டத்துக்கு பிறகு மூலவா் மற்றும் உற்ஸவ மூா்த்திகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் மணியங்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு ஊா்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
விழா ஏற்பாடுகளை ஜமீன்தாரும், பரம்பரை அறங்காவலருமான ஜமீன்தாா் ரெங்ககிருஷ்ண குமார விஜய பூச்சைய நாயக்கா் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் ஜெயநீலா, உதவி கோட்ட பொறியாளா் விஜயகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.