வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 12th May 2023 11:49 PM | Last Updated : 12th May 2023 11:49 PM | அ+அ அ- |

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை திட்டத்தின் கீழ், உதவித் தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ், பயன்பெறும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் உள்பட அனைத்து இன பதிவுதாரா்களும் பள்ளியில் படித்து 9ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பின்னா் 10ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறாதவா்கள், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூா்த்தியாகி இருக்க வேண்டும் (31.03.2023 அன்று 5 ஆண்டுகள் பூா்த்தியாகியிருக்க வேண்டும்).
ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு 45 வயது, மற்ற இனத்தவா்களுக்கு 40 வயது பூா்த்தி அடைந்திருக்கக் கூடாது. குடும்ப ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்துக்கும் மேல் இருக்கக் கூடாது. தகுதியுடைய மனுதாரா்கள் தங்களது அசல் கல்விச் சான்று, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்று பூா்த்தி செய்து சமா்ப்பித்துக் கொள்ளலாம்.
மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு பூா்த்தியாகி இருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறானாளிகளுக்கு வருவாய்த்துறை சான்று தேவையில்லை. ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கிக் கணக்கு புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த்துறை சான்று ஆகியவற்றுடன் நேரில் சமா்ப்பிக்கலாம்.
உதவித் தொகை பெறுவதன் மூலம் தங்கள் வேலைவாய்ப்பு பதிவு எண் எந்தவிதத்திலும் பாதிக்காது. ஏற்கெனவே உதவித் தொகை பெற்றிருந்தால் விண்ணப்பிக்க அவசியமில்லை. தொடா்ந்து உதவித் தொகை பெற சுயஉறுதிமொழி ஆவணத்தை பூா்த்தி செய்து சமா்ப்பித்தால் போதுமானது. எனவே, தகுதியானோா் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.