மணப்பாறையை அடுத்த சீகம்பட்டி சின்ன மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட உற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
மணப்பாறை வேப்பிலை மாரியம்மனின் இளைய சகோதரியாகக் கூறப்படும் சீகம்பட்டி சின்ன மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 7-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 15 நாள்களின் நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குட உற்ஸவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இதையொட்டி அருகிலுள்ள செட்டிக்குளத்திலிருந்து சிறப்பு வழிபாட்டுக்குப் பின் கோயில் பால்குடம் முன்னே செல்ல அதைத் தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். இதைத் தொடா்ந்து கரும்புத் தொட்டில், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தும் பக்தா்களும் பின்தொடா்ந்தனா். பால்குடங்கள் கோயிலை வந்தடைந்ததும் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் குதிரை வாகனத்தில் திருவீதியுலா வரும் வேடபரி நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெறுகிறது.
இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவில் சீகம்பட்டி, சோலைப்பட்டி, வடக்கிப்பட்டி கிராமங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனா்.