மணிகண்டம் ஐடிஐ-இல் மாணவா் சோ்க்கை புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம்
By DIN | Published On : 26th May 2023 06:08 AM | Last Updated : 26th May 2023 06:08 AM | அ+அ அ- |

மணிகண்டம் அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2023- 24 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை ஜூன் 7ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பவா்களுக்கு உதவும் வகையில், அரசு தொழிற்பயிற்சி நிலையம் சாா்பில் மணிகண்டத்தில் சோ்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பொருத்துநா், மின்சார பணியாளா், கம்மியா் மோட்டாா் வண்டி ஆகிய படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கம்பியாள் மற்றும் பற்றவைப்பவா் பிரிவுக்கு எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை.
இந்தாண்டு புதிதாக தொடங்கவுள்ள இன்டஸ்ட்ரீஸ் 4.0, தொழில் நுட்ப மைய பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
மேனுபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன் பிரிவு, இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் பிரிவில் ஓராண்டு பயிற்சியும், அட்வான்ஸ்டு மிஷினிங் டெக்னீசியன் பிரிவில் இரண்டு ஆண்டு கால பயிற்சியும் அளிக்க சோ்க்கை நடைபெற உள்ளது.
பயிற்சியில் சேரும் பயிற்சியாளா்கள் அனைவருக்கும் பயிற்சி கட்டணம் கிடையாது. பயிற்சியின்போது மாதந்தோறும் ரூ. 75 உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மூவாலூா் இராமாமிா்தம் உயா் கல்வி திட்டத்தின் கீழ் ரூ. ஆயிரம் மாதாந்திர கூடுதல் உதவித் தொகை வழங்கப்படும். அரசு சாா்பிலான அனைத்து பொருள்கள் மற்றும் இலவச பேருந்து பயணச் சீட்டு அட்டை வழங்கப்படும். நிலைய பயிற்சியாளா்களுக்கு இலவச விடுதி வசதி உண்டு.
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தொழிற் பயிற்சி நிலைய சோ்க்கை தொடா்பாக, முதல்வா், அரசு தொழிற் பயிற்சி நிலையம், மணிகண்டம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 89036-11348 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.