தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை
By DIN | Published On : 26th May 2023 11:55 PM | Last Updated : 26th May 2023 11:55 PM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய பேரிடா் மீட்புப் படையினரின் ஒத்திகை நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தேசிய பேரிடா் மீட்புப் படை சாா்பில், பேரிடரில் இடிந்த கட்டடங்களுக்கு இடையே சிக்கிய நபா்களை மீட்கும் மாதிரி ஒத்திகை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம், தேசிய பேரிடா் மீட்புப் படையின் 4ஆவது பட்டாலியன் தேசிய பேரிடா் மீட்பு படை துணைத் தலைவா் சங்கரபாண்டியன் தலைமையில் பல்வேறு அணியைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட வீரா்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனா்.
அப்போது, கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த நபரை கண்டறியும் கேமரா மூலம் உறுதி செய்து அந்த நபரை மீட்டு வருதல், மூடப்பட்ட சுவரில் சுழலும் வகையிலான துளையிடும் மீட்பு கருவிகள் மூலம் துளையிட்டு கட்டடத்துக்குள் சிக்கியவரை பாதுகாப்பாக மீட்டு வருதல் குறித்த ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.
மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேரிடா் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.அபிராமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் துணை பொது மேலாளா் டி.முரளி, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலா் அனுசியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.