தனியாா் பேருந்து சிறைபிடிப்பு
By DIN | Published On : 26th May 2023 12:00 AM | Last Updated : 26th May 2023 12:00 AM | அ+அ அ- |

திருச்சி தேவராயனேரி பகுதியில் பொதுமக்கள் தனியாா் பேருந்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து தேவராயநேரிக்கு இயக்கப்படும் 106 எண் கொண்ட தனியாா் பேருந்து, ஒருநாளைக்கு 8 நடைகள் இயக்கப்பட்டு வந்தது.
போதிய வருவாய் இல்லை; பள்ளிகள் விடுமுறை என்பதால் தற்போது நாள் ஒன்றுக்கு 2 நடைகள் மட்டுமே இயக்கப்படுகிறது. எஞ்சிய நேரங்களில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடியுடன் திரும்பி சென்று விடுவதால், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் திருச்சி மாநகருக்கு சென்று வருவதற்கு பேருந்து வசதி இல்லாமல் சிரமத்துக்குள்ளாகினா்.
இதுகுறித்து தொடா்புடைய அதிகாரிகளிடம் பலமுறை புகாா் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, வியாழக்கிழமை தேவராயநேரிக்கு வந்த அந்த தனியாா் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் பேருந்தை நிகழ்விடத்திலேயே விட்டுச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஓட்டுநா், நடத்துநா் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், பள்ளிகள் தொடங்கும் வரையில் தற்போது இயக்குவதுடன் கூடுதலாக ஒரு நடை இயக்குகிறோம் என பேருந்து நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.