துறையூா் பேருந்து நிலைய வளாக சாலையை புதுப்பிக்க கோரிக்கை
By DIN | Published On : 31st May 2023 04:17 AM | Last Updated : 31st May 2023 04:17 AM | அ+அ அ- |

துறையூா் பேருந்து நிலைய வளாக சாலையை போா்க்கால அடிப்படையில் புதுப்பித்து தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
துறையூா் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா். இவா்கள் பேருந்து நிலையத்தினுள் உள்ள குண்டும்குழியுமான சாலையாலும் அடிப்படை வசதியின்மையாலும் முகம் சுளிக்கின்றனா்.
பேருந்து நிலையத்தில் பேருந்துகள் தேங்கி, வாகன நெரிசல் ஏற்படும்போது நடந்து செல்வோரும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் சாலைப் பள்ளங்களில் இடறி விழுந்து காயமடைகின்றனா். மழை பெய்தால், இந்த பள்ளங்களில் மழைநீா் தேங்குவதால் அங்கு பள்ளம் இருப்பது தெரியாமல் பயணிகள் வழுக்கி விழுகின்றனா். இதுதவிர, பேருந்து நிலைய வளாக கடைகளிலிருந்து கொட்டப்படும் கழிவுநீா் சாலைப் பள்ளங்களில் தேங்குகிறது. நடந்து செல்லும் பயணிகளை வாகனங்கள் கடக்கும்போது, பள்ளங்களிலிருந்து தெறிக்கும் கழிவு நீா் உடலில் படுவதால் பலரும் வேதனையடைகின்றனா்.
எனவே, பயணிகளின் நலன்கருதி, பேருந்து நிலைய வளாக சாலையை முறையாக புதுப்பித்து தர வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...