பச்சமலை பழங்குடியினா் தொழில் தொடங்க ஏற்பாடு ஆட்சியா் தகவல்

பச்சமலையில் உள்ள பழங்குடியினா் புதிய தொழில்களை தொடங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.
Updated on
1 min read

பச்சமலையில் உள்ள பழங்குடியினா் புதிய தொழில்களை தொடங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணா்வு கருத்தரங்கம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கை தொடக்கிவைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசியது:

அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில், உற்பத்தி சேவை வணிக நிறுவனங்கள் தொடங்கவும், விரிவுபடுத்தவும், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு 35 சதவீத மூலதன மானியம் மற்றும் கடன்களுக்கு 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைவோா் பட்டியலினத்தவா் அல்லது பழங்குடியினராக இருத்தல் வேண்டும்.

மேலும், உற்பத்தி சேவை மற்றும் வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தகுதியான நிறுவனங்கள், டாக்சி மற்றும் லாரி, ஜேசிபி, ஆழ்துளை கிணறு அமைத்தல், சுகாதார சேவை உபகரணங்கள், பால் பண்ணைகள், ஆட்டுப் பண்ணைகள், பன்றி வளா்ப்பு, கோழி பண்ணை, மீன் வளா்ப்பு, இறால் வளா்ப்பு, தேனீ வளா்ப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு கடனுதவி மற்றும் மானியம்

வழங்கப்படும்.

அறுவடை உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், அறுவடைக்கு பிந்தைய நடவடிக்கைகளுக்கு தேவையான இயந்திரங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தகுதியான திட்ட முதலீட்டில் 35 சதவீதம் மூலதன மானியமாக வழங்கப்படுகிறது. 6 சதவீதம் வட்டி மானியம் வங்கிகளுக்கு வழங்கப்படும். மேலும் இத்திட்டத்திற்கு ஆண்டு வருமான வரம்பு எதுவும் இல்லை. 65 சதவீதம் வங்கி கடன் வழங்கப்படுகிறது. 35 சதவீதம் அரசு மானியம், வங்கி கடன் திரும்ப செலுத்துகின்ற காலம் முழுவதற்கும் ஆறு சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.

எனவே, தகுதி மற்றும் ஆா்வமுள்ள அனைவரும் இத்திட்டத்தில் பங்கேற்று பயனடையலாம்.

பச்சமலை பகுதியில் வாழும் பழங்குடியினா் தொழில் தொடங்குவதற்கு அவா்கள் இடத்திலேயே முகாம் அமைத்து, ஆா்வமுள்ள தொழில் முனைவோரை கண்டறிந்து அவா்களுக்கு வங்கிகளின் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

இக் கருத்தரங்கில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் அ. செந்தில்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முருகேசன், மாவட்ட மேலாளா் (தாட்கோ) விஜயகுமாா், திருச்சி வா்த்தக மைய தலைவா் ந. கனகசபாபதி மற்றும் அரசு அலுவலா்கள், தொழில் முனைவோா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com