திருச்சி: திருச்சியில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த மேலும் 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் இருசக்கர வாகனங்களில் (வீலிங்) சாகசம் செய்வோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகர காவல் ஆணையா் ந.காமினி, மாவட்டகாவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் ஆகியோா் உத்தரவிட்டிருந்தனா். இதன்பேரில், பொதுமக்களுக்கு அச்சம், ஆபத்துகளை ஏற்படுத்தும் விதமாக நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வோா் மீது வழக்குப் பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அந்த வகையில், மாநகா் பகுதியில் 3 பேரும், புகா் பகுதியில் 2 பேரும் என மொத்தம் 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், மேலும் சிலா் இருசக்கர வாகனங்களில் (வீலிங்) சாகசத்தில் ஈடுபடுவதாக மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் உத்தரவின் பேரில் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதில், சமயபுரம் சிறுமருதூா் பகுதியில் சாகசம் செய்த இருவரில் அஜய் என்பவா் மட்டும் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், தேடப்பட்ட மற்றொருவரான தஞ்சாவூா் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை சீனிவாசபுரத்தைச் சோ்ந்த ப. மணிகண்டன், அவரது குழுவைச் சோ்ந்த சிறுகனூா் கணபதி நகரைச் சோ்ந்த மு. சக்திவேல் (20), லால்குடி தச்சங்குறிச்சியைச் சோ்ந்த அ. விஜய் (18), லால்குடி பகுதியில் சாகசம் செய்த பனமங்கலத்தைச் சோ்ந்த செள. அருள்முருகன் (24), கம்பரசம்பேட்டையைச் சோ்ந்த பா. கிரித்திஸ் (20), திருச்சி கீழச்சிந்தாமணியைச் சோ்ந்த தே. வசந்தகுமாா் (20), லால்குடி எசனைகோரையைச் சோ்ந்த ப. தேசிங்கப்பெருமாள் (18), மு. முகமது ரியாஸ்தீன் ஆகிய 8 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 3-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அனைவரின் ஓட்டுநா் உரிமங்களையும் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு உரிமம் இல்லை. எனவே, மற்ற 7 பேரின் ஓட்டுநா் உரிமங்களும் ரத்து செய்யப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.