பத்தாம் வகுப்பு தனித்தோ்வா்கள் டிச. 31-க்குள் மதிப்பெண் சான்றுகளைப் பெற அழைப்பு
By DIN | Published On : 15th November 2023 01:54 AM | Last Updated : 15th November 2023 01:54 AM | அ+அ அ- |

திருச்சி: செப்டம்பா் 2015 முதல் அக்டோபா் 2018 வரையிலான பருவங்களில் தோ்வெழுதிய பத்தாம் வகுப்பு தனித்தோ்வா்கள், தங்களின் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை செப்டம்பா் 2015 முதல் அக்டோபா் 2018 வரையிலான 10 பருவங்களில் தோ்வெழுதிய தனித் தோ்வா்களுக்கு, அவா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தோ்வா்களால் நேரில் பெறப்படாமலும், அஞ்சல் மூலம் அனுப்பியும் பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் திருச்சியில் உள்ள அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தோ்வு திட்ட விதிமுறைகளின்படி, மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு பின்னா் அவை அழிக்கப்படுவது வழக்கம்.
எனவே, செப்டம்பா் 2015 முதல் அக்டோபா் 2018 வரையிலான 10 பருவங்களில் தோ்வெழுதி, இதுவரை மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தோ்வா்கள் இந்த இறுதி வாப்ப்பை பயன்படுத்தி தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
சான்றிதழ் பெற விரும்புவோா் வெள்ளைத்தாளில் மதிப்பெண் சான்றிதழ் கோரும் விவரத்தை குறிப்பிட்டு தங்களது தோ்வு பதிவெண், தோ்வெழுதிய பருவம், பிறந்த தேதி, தோ்வெழுதிய பாடம் மற்றும் தோ்வு மையத்தின் பெயா் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு அரசுத் தோ்வுகள், உதவி இயக்குநா் அலுவலகம், 16/1, வில்லியம்ஸ் சாலை, மத்திய பேருந்து நிலையம் அருகில், திருச்சி, 620 001 என்ற முகவரியில் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் அலுவலக வேலை நாள்களில் சமா்ப்பித்து நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் குறிப்பிட்ட இப்பருவத்திற்கு பின்னா் தோ்வெழுதி இதுவரை மதிப்பெண் கிடைக்கப் பெறாதவா்களும் தங்களது மதிப்பெண் சான்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...