ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள்: அமைச்சா் நேரில் ஆய்வு
By DIN | Published On : 15th November 2023 01:57 AM | Last Updated : 15th November 2023 01:57 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி, மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து ஊா்களுக்கு திரும்புவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட வெளியூா்களில் பணிபுரிவோா், கல்வி பயில்வோா் தங்களது சொந்தஊருக்கு வந்தனா். பின்னா் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை இரவு குடும்பத்துடன் மீண்டும் புறப்பட்டனா். இதனால் திருச்சியில் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்காக தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கியது. திங்கள்கிழமை அரசு விடுமுறை அளித்திருந்ததால் இரவு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக திருச்சியில் இருந்து சென்னை, வேலூா், கோவை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானோா் சென்றனா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் , சந்திப்பு ரயில் நிலையம் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. ரயில்களில் முன்பதிவு ஏற்கெனவே முடிந்து விட்டநிலையில், பலா் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க வரிசையில் காத்திருந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மத்திய பேருந்து நிலையத்தில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அலுவலா்களிடம் பேருந்துகளின் இயக்கத்துக்காகசிறப்பு ஏற்பாடுகள் குறித்தும், பயணிகளின் நலன், பாதுகாப்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டாா். ஆய்வின்போது, போக்குவரத்துத்துறை கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குநா் ஆா். மோகன், திருச்சி மண்டல பொது மேலாளா் எஸ். சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...