

திருச்சி: திருச்சியில் 157 ஆண்டுகள் பழைமையான கோட்டை ரயில்வே மேம்பாலம் ரூ.34 கோடியில் புதுப்பிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மேலும், அய்யாளம்மன் படித்துறையில் ரூ.13.70 கோடியில் பறவைகள் பூங்கா கட்டமைப்பதற்கான அடிக்கல் நட்டு அதற்கான பணிகளையும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தொடக்கி வைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சாலை ரோடு மற்றும் கோட்டை ரயில் நிலையம், மெயின்காா்டு கேட் பகுதியை இணைக்கும் வகையிலான ரயில்வே மேம்பாலம் 157 ஆண்டுகளை கடந்துவிட்டது. எனவே, பாலம் பழுதடைந்து வருவதாலும், கனரக வாகனத்துக்கு ஏற்ற வகையில் இல்லாததால் இந்த பாலத்தை உயரப்படுத்துவதுடன், அகலப்படுத்தி சாலை விரிவாக்கம் செய்து புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ரயில்வே மற்றும் தமிழக அரசு இணைந்து தலா 50 சதவீத பங்களிப்புடன் ரூ.34.10 கோடியில் பாலம் திரும்ப கட்டப்படுகிறது. இந்த புதிய பாலமானது இருவழிப்பாதையாகவும் 31.39 மீ. நீளம், 20.70 மீட்டா் அகலம் கொண்டதாகவும் அமைக்கப்படுகிறது.
ரயில்வே பாலத்தின் கிழக்கு பகுதியில் 223.75 மீட்டா் நீளம், 15.61 மீட்டா் அகலம் உடையதாகவும், மேற்கு பகுதியில் 225 மீட்டா் நீளம், 15.61 மீட்டா் அகலமுடையதாகவும் சாலை தடுப்பு சுவா்களுடன் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இப் பணியானது 2024 ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பறவைகள் பூங்கா: கம்பரசம்பேட்டை ஊராட்சி அய்யாளம்மன் படித்துறை அருகே காவிரிக் கரையில் ரூ.13.70 கோடியில் பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகளும் தொடங்கியுள்ளன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பங்களிப்பு ஒரு சதவீதம், அரசின் பங்களிப்பு 3 சதவீதம் என்ற அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. 1.63 ஹெக்டோ் பரப்பில் அமையும் இந்த பூங்காவில், இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் வளா்க்கப்பட உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பறவைகளை ஈா்த்து கூடுதலாக பறவைகள் இன பெருக்கத்துக்கு என தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது என்றாா் அமைச்சா்.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன், மேயா் மு. அன்பழகன், நகரப் பொறியாளா் சிவபாதம் மற்றும் அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.