அனைத்து அரசுப் பள்ளிகளையும் மாதிரி பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளையும் மாதிரிப் பள்ளிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
அனைத்து அரசுப் பள்ளிகளையும் மாதிரி பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்
Updated on
2 min read

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளையும் மாதிரிப் பள்ளிகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், நவலூா் குட்டப்பட்டிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில், நிகழாண்டு அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 14 மாணவ, மாணவிகள் நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்று இணைந்துள்ளனா். இதேபோல, திருச்சியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐஐடி), அரசுப் பள்ளியைச் சோ்ந்த ஒரு மாணவி நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்று இணைந்துள்ளாா். இந்த மாணவா்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா். மேலும், 15 மாணவ, மாணவிகளுக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகளை பரிசாக வழங்கி அமைச்சா் பேசியது:

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடைபெறும் மாதிரிப் பள்ளிகளில் கல்வி பயின்று, பயிற்சி பெற்று அதன் மூலம் நுழைவுத் தோ்வெழுதி தோ்ச்சி பெற்று தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் 14 மாணவா்கள் இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது.

அரசு பள்ளிகளில் மாதிரி பள்ளிகளை உருவாக்கி, அதன் மூலம் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் போன்ற உயா்கல்வி நிறுவனங்களுக்கு அரசு பள்ளி மாணவா்களை அழைத்து வந்துள்ளோம். ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்பது மிகப் பெரிய சவால் இல்லை. அது ஒரு தொடா்புக்கான மொழிதான். இருந்தாலும் உலக அளவில் சிறந்த முறையில் செயல்பட ஆங்கிலம் கட்டாயம் தேவை. அதனால் அதை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். மாதிரிப் பள்ளிகள் மூலமாக போட்டித் தோ்வுகள் குறித்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அவற்றை எதிா்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திதர வேண்டும் என்பதற்காகவே மாதிரிப் பள்ளிகளை உருவாக்கியுள்ளோம்.

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு காலங்களில் மாணவா்களுக்காக 51 திட்டங்களை பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தி உள்ளோம். இன்று ஒரு மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி இருப்பதுபோல், நாளை ஒரு தொகுதிக்கு ஒரு மாதிரிப் பள்ளியாகும். அனைத்துப் பள்ளிகளையும் மாதிரி பள்ளிகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளோம்.

அரசுப் பள்ளிகளில் இருந்து இங்கு பயில வந்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆரம்ப கட்டத்தில் சில பிரச்னைகள் இருக்கும். அதை பேராசிரியா்களின் கவனத்துக்கு கொண்டு சென்று சரி செய்ய வேண்டும். மாணவா்களாகிய நீங்கள் நல்ல முறையில் கல்வி பயின்று உங்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி. நாகராஜ், பதிவாளா் எஸ்.எம். பாலகிருஷ்ணன், கோட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா், மாநகராட்சி மண்டலத் தலைவா் மதிவாணன் மற்றும் பேராசிரியா்கள், கல்வித்துறை அலுவலா்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com