

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை என்று தமிழக இளைஞா் காங்கிரஸ் தலைவா் லெனின் பிரசாத் கூறினாா்.
காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி எம்.பி., கடந்தாண்டு செப்டம்பா் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்கினாா். இந்த நடைப்பயணத்தை நிகழாண்டு ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் நிறைவு செய்தாா்.
இதன் ஓராண்டு நிறைவையொட்டி, திருச்சியில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நடைப்பயணத்தில் பங்கேற்ற தமிழக இளைஞா் காங்கிரஸ் தலைவா் லெனின் பிரசாத் செய்தியாளா்களிடம் கூறியது:
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை தோ்தல் நேரத்தில் அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக, கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது சிலிண்டா் விலைக் குறைப்பு செய்யப்பட்டது மக்களவைத் தோ்தலுக்காகவே. சிஏஜி அறிக்கையில் பாஜகவின் ஊழல்கள் அம்பலமாகியுள்ளன. இந்த ஊழல்களை மக்கள் மத்தியில் இளைஞா் காங்கிரஸ் எடுத்துச் செல்லும்.
மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியில் இளைஞா்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். முதல் தலைமுறை வாக்காளா்களை ஈா்க்கும் வகையில் இளைஞா் காங்கிரஸ் செயல்பாடுகள் அமையும் என்றாா் அவா்.
திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அருகே தொடங்கிய நடைபயணம் காந்திச் சந்தையில் பகுதியில் காந்தி சிலை வரை சென்று நிறைவடைந்தது. கொட்டும் மழையிலும் கட்சியின் தொண்டா்கள் திரளாக பங்கேற்றனா்.
இதில், கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் ஜவஹா், வழக்குரைஞா் சரவணன், கோட்டத் தலைவா் சிவாஜி சண்முகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.