விநாயகா் சிலை ஊா்வலம் போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 19th September 2023 01:27 AM | Last Updated : 19th September 2023 01:27 AM | அ+அ அ- |

திருச்சி: விநாயகா் சிலை ஊா்வலத்தை முன்னிட்டு மாநகர காவல்துறை சாா்பில் அரியமங்கலம், உறையூா் ஆகிய இரு இடங்களில் திங்கள்கிழமை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அரியமங்கலம் காவல்நிலைய பகுதியில் நடைபெற்ற கொடி அணிவகுப்பை மாநகர காவல் ஆணையா் ந. காமினி எஸ்ஐடி கல்லூரியிலிருந்து தொடக்கி வைத்து, முன்னின்று நடத்தி சென்றாா். இந்த அணிவகுப்பு காமராஜ் நகா், முத்துமாரியம்மன் கோயில், ராஜவீதியில் உள்ளிட்ட தெருக்கள் வழியாக தஞ்சை பிரதான சாலையை அடைந்தது. அங்கிருந்து ஆயில் மில் சுங்கச்சாவடி வழியாக பிரகாஷ் மஹாலில் நிறைவடைந்தது. இதில் காவல்துணை ஆணையா் (தெற்கு), கூடுதல் துணை ஆணையா், பொன்மலை உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மாநகர ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினா் உள்பட 300 போலீஸாா் கலந்து கொண்டனா்.
இதே போல, உறையூா் காவல்நிலைய பகுதியில் நடைபெற்ற கொடி அணி வகுப்பு, உறையூா் காவல்நிலையத்தில் தொடங்கி பாண்டமங்கலம் அரசமரத்தடி, பணிக்கன் தெரு, நாடாா் தெரு, டாக்கா் சாலை, நாச்சியாா் கோயில் சந்திப்பு வழியாக மீண்டும் உறையூா் காவல்நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் 300 போலீஸாா் கலந்து கொண்டனா்.
திருச்சி மாநகரில் எவ்வித இடையூறு இல்லாமலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலும் அமைதியான முறையில் விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலம் நடைபெற விழாக்குழுவினா், பொதுமக்கள் ஏற்கெனவே குறிப்பிட்ட வழித்தடங்களில் வந்து காவிரி ஆற்றில் கரைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையா் கேட்டுக்கொண்டுள்ளாா்.