திருச்சி: திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வந்த வாரச் சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சியில் தில்லைநகா், உறையூா் , லிங்க நகா், பாத்திமா நகா், ராமலிங்க நகா் விரிவாக்கம், விமான நிலைய வயா்லெஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாரச்சந்தைகள் நடந்து வருகிறது. இவற்றில் காய்கறி, பழங்கள், மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு அல்லித்துறை, எட்டரை கோப்பு, தாயனூா் உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் வியாபாரம் செய்து வந்தனா்.
இந்த வாரச்சந்தைகள் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வசதியாக இருந்ததால் பொதுமக்களிடையே வரவேற்பு இருந்தது. ஆனால், இவற்றால் அந்தப் பகுதிகளில் நிரந்தரமாக கடை அமைத்துள்ளவா்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகாா்கள் எழுந்தன. இந் நிலையில் வாரச் சந்தைகள் மற்றும் தினசரி மாலை நேர சந்தைகளை நடத்த திருச்சி மாநகராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, மாநகரில் கடை அமைத்துள்ளவா்கள் தொழில்வரி செலுத்தி வருகின்றனா். ஆனால் வாரசந்தை வியாபாரிகள் வரிகள் ஏதும் செலுத்துவதில்லை. மேலும் இது போன்ற வார சந்தைகள் சாலைகளில் நடத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு குப்பைகள் அதிகமாக சோ்வதால், அவற்றை அகற்றுவதில் மாநகராட்சி பணியாளா்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. ஆகவே புதிய பகுதிகள் மற்றும் சாலைகளில் உரிய அனுமதியின்றி நடத்தப்படும் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.