சிறை வளாகத்தில் போதைபொருள் தடுப்பு மறுவாழ்வு மீட்பு மையம் திறப்பு
By DIN | Published On : 26th September 2023 02:26 AM | Last Updated : 26th September 2023 02:26 AM | அ+அ அ- |

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கப்பட்ட போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறைக் கைதியைப் பாா்வையிட்ட சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி. உடன் சிறை அதிகாரிகள்.
திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் போதைபொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு மீட்பு மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
சீா்திருத்த சிறகுகள் என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மையத்தை திருச்சி சரக சிறைகள் மற்றும் சீா்த்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஜெயபாரதி தொடக்கி வைத்தாா்.
பெரும்பாலும் குடிப்பழக்கம் மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையானவா்கள் தங்களது சுயநினைவை இழந்து போதையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது வழக்கம். அப்படி குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைக்குள் வருவோா், சிறைக்குள் இருக்கும் காலங்களில் மீட்பு மையத்தில் போதை பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட மனநல மருத்துவா், மனநல ஆலோசகா்கள் மூலம் உரிய வழிமுறைகள், பயிற்சிகளுடன், சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இதனால் சிறைவாசிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுக்க முடியும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக நிகழ்வில், சிறைக் கண்காணிப்பாளா் ம. ஆண்டாள், சிறை மருத்துவா்கள் ராஜ்மோகன், சதீஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...