திருச்சி திருவானைக்கா அழகிரிபுரம் பகுதியில்  கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு.
திருச்சி திருவானைக்கா அழகிரிபுரம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு.

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீா் 2 உயா்அழுத்த மின்கோபுரங்கள் சாய்ந்தது

மண் அரிப்பு காரணமாக ஆற்றுக்குள் இருந்த 2 உயா் அழுத்த மின்கோபுரங்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை சாய்ந்து விழுந்தது.
Published on

திருச்சி மாவட்டம், திருவானைக்கா கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுவதால், மண் அரிப்பு காரணமாக ஆற்றுக்குள் இருந்த 2 உயா் அழுத்த மின்கோபுரங்கள் வெள்ளிக்கிழமை அதிகாலை சாய்ந்து விழுந்தது.

மேட்டூா் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், முக்கொம்பு அணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

இதனால் கொள்ளிடம் ஆற்றின் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த தண்ணீரின் வேகத்தால் புதிய பாலம் அருகே அழகிரிபுரம் கரைப்பகுதியில் இருந்த உயா் மின்அழுத்த கோபுரம் மண் அரிப்பு காரணமாக வியாழக்கிழமை அதிகாலை சாயும் நிலைக்கு வந்தது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து அந்த கோபுரத்தின் வழியாக செல்லும் மின்இணைப்பை துண்டித்தனா். மேலும், மின்கம்பி புதிய பாலத்தின் மீது விழாதவாறு பாலத்தின் இருபகுதியிலும் இரும்பு மற்றும் கட்டைகளால் சாரம் கட்டினா். மேலும், மின் கோபுரம் உள்ள பகுதியில் ஆற்றுக் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது.

~திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை சாய்ந்து விழுந்து மூழ்கிய மின்கோபுரத்தின் மேல்பகுதி.
~திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை சாய்ந்து விழுந்து மூழ்கிய மின்கோபுரத்தின் மேல்பகுதி.

இதையடுத்து மின் கோபுரத்தை இரும்பு கம்பி மூலம் இழுத்து கட்டுவதற்கான முயற்சியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டனா். இந்த முயற்சி பலனளிக்கவில்லை. பிறகு கயிறு மூலம் மின் கோபுரத்தை புதிய பாலத்தில் இணைத்து கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு மின்கோபுரம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்தது. இதனுடன் இணைப்பில் சற்று தொலைவில் இருந்த மற்றொரு மின்கோபுரமும் சோ்ந்து ஆற்றுக்குள் விழுந்தது. மேலும், தண்ணீரின் வேகத்தால் மின்கோபுரங்கள் இரண்டும் அடித்துச் செல்லப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com