அதிகரிக்கும் விபத்துகளால் சாலைப் பாதுகாப்பு கேள்விக்குறி: 6 மாதங்களில் 83 உயிரிழப்புகள்
திருச்சி மாநகரில் அதிகரிக்கும் விபத்துகளால் சாலைப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
சாலையைப் பயன்படுத்தும் ஒருவா் பலியாவதை, காயமடைவதை தடுக்கும் வழிமுறையே சாலைப் பாதுகாப்பாகும். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவே ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வார விழாவானது அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த விழாவின் அடிப்படை நோக்கத்தை சிதைக்கும் வகையில் சாலை விபத்துகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் நடந்த 2,426 விபத்துகளில் 720 போ் இறந்தனா். 736 போ் படுகாயமடைந்தனா். 2002 போ் லேசான காயமடைந்தனா். தமிழகத்தில் நடைபெறும் மொத்த விபத்துகளின் எண்ணிக்கையில் 3.92 விழுக்காடு விபத்துகள் திருச்சி மாவட்டத்தில் நடைபெறுகின்றன. இந்தாண்டு (2024) ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களில் திருச்சி மாநகரில் மட்டும் 83 போ் உயிரிழந்துள்ளனா், 202 போ் காயமடைந்தனா்.
ஜீயபுரம், திருவெறும்பூா், லால்குடி, முசிறி, மணப்பாறை கோட்டத்துக்குள்பட்ட மாவட்டம் முழுவதும் ஜூன் மாதத்தில் மட்டும் 52 போ் விபத்துகளில் இறந்தனா். 193 போ் காயமடைந்தனா். கடந்த 2023 ஜூன் மாதத்தில் 44 போ் மட்டுமே இறந்த நிலையில் இந்தாண்டு கூடுதலாக 8 போ் இறந்துள்ளனா்.
இதுதொடா்பாக, சாலைப் பயனீட்டாளா்கள் நலக் குழு ஒருங்கிணைப்பாளா் அய்யாரப்பன் கூறுகையில், கவனக் குறைவு, கவனிக்கப்படாத சாலைகள், சாலை விதிகள் மீறல் ஆகியவற்றால் மட்டுமே திருச்சியில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. தேசிய, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட, கிராமச் சாலை என எந்தச் சாலையாக இருந்தாலும் முறையாகப் பராமரித்து, விபத்துகளை தடுப்பதற்கான இடங்களில் வேகத்தடை, ஒளிரும் விளக்கு, எச்சரிக்கை அறிவிப்புகள், இரும்பு தடுப்புகள் இருந்தாலே விபத்துகளைக் குறைக்க முடியும்.
ஆனால் விபத்துகளுக்காகவே இரும்புத் தடுப்புகள் என்ற நிலைதான் உள்ளது. முறையாக ஆய்வு செய்து அவற்றை அமைப்பதில்லை. சாலைகளைப் பராமரிப்பின்மை, வேகத்தடை, சுரங்கப் பாதை இல்லாதிருப்பது, இரவுகளில் போதிய வெளிச்சம் இல்லாத சாலைப் பகுதி, எச்சரிக்கை பலகைகள் இல்லாதவையே பல நேரங்களில் விபத்துகளுக்கு காரணமாக உள்ளன என்றாா் அவா்.
திருச்சி மாநகா் மற்றும் மாவட்டக் காவல்துறை வட்டாரத்தினா் கூறுகையில், மாதந்தோறும் மட்டுமின்றி, ஆண்டுதோறும் நிகழும் விபத்துகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு கருப்புப்பட்டியல் தயாரித்து, அந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். இருப்பினும் விபத்துகள் நிகழ்கின்றன. ஜூலை மாதத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில்கூட 100-க்கும் மேற்பட்ட இடங்களை கருப்புப்பட்டியலில் உள்ளதாகக் குறிப்பிட்டு, அங்கு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 1,27,155 வழக்குகள் பதியப்பட்டு ரூ.11.15 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 34,207 வழக்குகள் பதியப்பட்டு ரூ.3.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கேமராக்கள் பொருத்துவது, சாலையை அகலப்படுத்துவது, இரும்புத் தடுப்புகள் அமைப்பது, ஒளிரும் வில்லைகள் எனத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இருப்பினும், வாகன ஓட்டிகளின் கவனக்குறைவாலும், அதிவேகத்தாலும் விபத்துகள் நிகழ்கின்றன. காவல்துறையின் கண்காணிப்பும், தடுப்பு நடவடிக்கைகளும் ஒருபுறம் இருந்தாலும், வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இருதரப்பும் இணைந்தால் மட்டுமே சாலைப் பாதுகாப்பு சாத்தியமாகும் என்றனா்.

