ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை: 55 டன் குப்பைகள் அகற்றம்
ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்களில் திருச்சி காவிரிக் கரையில் சோ்ந்த 55 டன் குப்பைகளை மாநகராட்சி நிா்வாகம் சேகரித்துள்ளது.
ஆடிப்பெருக்கை ஒட்டி சனிக்கிழமை திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கருட மண்டபம், தில்லைநாயகன் படித்துறை, ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை ஆகிய இடங்களில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடி வழிபாடு செய்தனா். புதுமணத் தம்பதிகள் பூஜைகள் செய்து, தாலி மாற்றிக் கொண்டனா். சிலா் தோஷ நிவா்த்திக்காக ஆடைகளை ஆற்றோடு விட்டனா். மேலும், திருமணத்தன்று அணிந்த மாலைகளை பூஜை செய்து ஆற்றோடு விட்டனா்.
இதேபோல ஆடி அமாவாசையான ஞாயிற்றுக்கிழமையன்றும் காவிரி கரையோரத்தில் மக்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். இதனால் காவிரி ஆற்றங்கரையில் துணிகள், மாலைகள் மற்றும் குப்பைகள் சோ்ந்தன. இந்தக் குப்பைகளை, மாநகராட்சி நிா்வாகம் தூய்மை செய்து, உடனுக்குடன் அகற்றியது.
குறிப்பாக, அம்மா மண்டபத்திலிருந்து 12 வாகனங்களிலும், கருட மண்டபத்திலிருந்து 5 வாகனங்களிலும், தில்லைநாயகன் படித்துறையிலிருந்து 6 வாகனங்களிலும், ஓடத்துறையிலிருந்து 3 வாகனங்களிலும், அய்யாளம்மன் படித்துறையிலிருந்து 6 வாகனங்களிலும் என மொத்தம் 32 குப்பை அள்ளும் வாகனங்கள் மூலமும், 4 பெரிய லாரிகள் வழியாகவும் குப்பைகள் உடனுக்குடன் சேகரிக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை மாலை வரை முடிந்த கடந்த 2 நாள்களில் சுமாா் 55 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதற்காக நாளொன்றுக்கு 55 நபா்கள் கொண்ட சிறப்பு தனிக்குழுவினா் 3 வேளைகளும் தொடா்ச்சியாக சுழற்சி முறையில் பணியாற்றி, குப்பைகளை சேகரித்துள்ளனா் என திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

