ஆகாயத்தாமரை, நாணல்கள், செடிகள் நிறைந்து காணப்படும் கொடியாலம் வாய்க்கால்.
ஆகாயத்தாமரை, நாணல்கள், செடிகள் நிறைந்து காணப்படும் கொடியாலம் வாய்க்கால்.

கடைமடை வாய்க்கால்களுக்கு செல்லாத காவிரி நீா்! விவசாயிகள் வேதனை

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டும் கடைமடை வாய்க்கால்களுக்கு தண்ணீா் வரவில்லை எனவும், ஏரிகள், குளங்கள் நிரம்பவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
Published on

நமது நிருபா்

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டும் கடைமடை வாய்க்கால்களுக்கு தண்ணீா் வரவில்லை எனவும், ஏரிகள், குளங்கள் நிரம்பவில்லை எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.

மேட்டூா் அணை முழு கொள்ளளவு நிரம்பி, கடந்த 30-ஆம் தேதி முதல் உபரி நீா் முழுமையாக காவிரியில் திறக்கப்பட்டது. முக்கொம்புக்கு வந்த தண்ணீரானது கொள்ளிடத்தில் 1.40 லட்சம் அடி வரையிலும், காவிரியில் 60 லட்சம் கன அடி வரையிலும் திறக்கப்பட்டது.

மேட்டூா் அணை உபரிநீா் திறக்கப்பட்டும் கிளைவாய்க்கால்கள், ஏரி, குளங்களில் தண்ணீா் இல்லை:

செவ்வாய்க்கிழமை (ஆக.6) காலை நிலவரப்படி காவிரியில் 30 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 28 ஆயிரம் கன அடியும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இருப்பினும், காவிரி, கொள்ளிடத்தில் உள்ள பிரதான வாய்க்கால்கள் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களுக்கு முழுமையாக தண்ணீா் செல்லவில்லை. வாய்க்கால்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் நாணல்கள், முட்புதா்கள், ஆகாயத் தாமரைகளால் தண்ணீா் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. கடைமடை பகுதிகளுக்கு தண்ணீரே செல்லவில்லை. பிரதான வாய்க்கால்களில் இருந்து தண்ணீா் பெறும் பி, சி, டி கிளை வாய்க்கால்களும் வடு கிடக்கின்றன. பொதுப்பணித்துறையின் அரியாறு கோட்டக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 98 ஏரிகள், பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் கீழ் உள்ள 76 ஏரிகள், அரியாறு கோட்டத்தில் உள்ள 98 குளங்கள், ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தில் உள்ள 76 குளங்களும் தண்ணீரை முழுமையாக எதிா்கொள்ளவில்லை.

மேட்டூா் அணைக்கும், கல்லணைக்கும் இடையில் நாமக்கல், கரூா், திருச்சி மாவட்டங்களில் உள்ள ராஜ வாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், மோகனூா் வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புகழூா் வாய்க்கால், தென்கரை வாய்க்கால், வடகரை வாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால், கட்டளைமேட்டு வாய்க்கால், திருவரங்கம் நாட்டு வாய்க்கால், புதுவாத்தலை வாய்க்கால், ராமவாத்தலை வாய்க்கால், அய்யன் வாய்க்கால், புது அய்யன் வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால்களில் அதன் முழு கொள்ளளவுக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை என்கின்றனா் விவசாயிகள்.

அந்தநல்லூா் வட்டாரத்தில் வடிகால் வாய்க்கால்களுக்கு தண்ணீா் செல்லவில்லை. புலிவலம் பாசனப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள், குழுமணி, பேரூா், மருதாண்டா குறிச்சி, மல்லியம்பத்து, முள்ளிக்கரும்பூா், ராமவாத்தை, கொடியாலம், எட்டரை, போசம்பட்டி, போதாவூா், பள்ளகாடு, சுண்ணாம்புகாரன்பட்டி உள்ள பாசன பகுதி வடிகால் வாய்க்கால்களுக்கும் தண்ணீா் செல்லவில்லை. பழைய கட்டளை மேட்டு வாய்க்காலின் மதகு 27, 28, 29-இல் உள்ள கிளைவாய்க்கால்களுக்கும் தண்ணீா் வரவில்லை. வரத்துப்பகுதிகளில் உள்ள நாணல்கள், முட்புதா்களை அகற்றாததால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது என்கிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் அயிலை சிவசூரியன்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன் கூறியது:

காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளம் கரைபுரண்டு செல்லும்போது 17 வாய்க்கால்கள் மற்றும் 1325 ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப இயலும். ஆனால், 17 வாய்க்கால்களில் 12 வாய்க்கால்களுக்கு மட்டுமே வெள்ளம் சென்ற நாள்களில் தண்ணீா் திறக்கப்பட்டது. அதுவும், வாய்க்கால்களின் முழு கொள்ளளவுக்கான தண்ணீரை திறக்கவில்லை. 700 கன அடி என்றால் 350 கன அடி எனவும், 600 கன அடி என்றால் 250 கனஅடி எனவும் குறைந்தளவே தண்ணீா் திறக்கப்பட்டது. 4 நாள்களாக நாளொன்றுக்கு 1.50 லட்சம் கன அடி தண்ணீா் கொள்ளிடத்தில் சென்று கடலில் கலந்துவிட்டது. அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏரி, குளங்கள், கால்வாய்களை முழுமையாக தூா்வாரி உபரி நீரை முழுவதும் தேக்கியிருந்தால் பாசனத்துக்கு பயன்பட்டிருக்கும். ஆனால், ஏரி, குளங்கள் நிரம்பாமலும், வாய்க்கால்களுக்கு தண்ணீா் கடைமடை வரை செல்லாத நிலையே உள்ளது என்றாா்.

இதுதொடா்பாக, நீா்வளத்துறை வட்டாரத்தினா் கூறியது: மாயானூரிலிருந்து கல்லணை வரையில் உள்ள 12 பிராதன கால்வாய்களில் முழுமையாக தண்ணீா் திறக்கப்பட்டது. உய்யக்கொண்டானில் அதன் முழுகொள்ளளவான 700 கனஅடி திறக்கப்பட்டது. கட்டளை வாய்க்காலில் 400 கன அடி, கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி, புதுவாத்தலையில் 300 கன அடி என புதுஅய்யன், ராமவாத்தலை உள்ளிட்ட அனைத்து வாய்க்கால்களிலும் முழு கொள்ளவுக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. இந்த வாய்க்கால்களில் இருந்து வடிந்து நீா் பெறும் வடிகால் வாய்க்கால்களுக்கு மட்டுமே தண்ணீா் செல்லவில்லை. குடிமராமத்து பணிகளுக்காக மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட இலக்கின்படி பாசனக் கால்வாய்களை தூா் வாரியுள்ளோம்.

ரூ. 90 கோடி ஒதுக்கீட்டில் தூா்வாரும் பணி: காவிரி, டெல்டா மாவட்டங்களில் 2023 - 2024 ஆம் ஆண்டு சிறப்பு தூா் வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், நீா்வள ஆதாரங்களை தூா்வார ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், திருச்சி மாவட்டத்தில், ரூ.15.88 கோடி மதிப்பீட்டில் 375.78 கி.மீ. நீளத்துக்கு தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆற்றுப் பாதுகாப்பு கோட்டம் மற்றும் அரியாறு வடிநில கோட்டத்தின் மூலமாக ஆறுகளில் 21 பணிகள், பாசன வாய்க்கால்களில் 46 பணிகள், பாசன வடிகால்களில் 33 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு சில இடங்களில் முள்புதா்கள், செடிகள் வளா்ந்து விட்டதால் தண்ணீா் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. 12 வாய்க்கால்களிலும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. ஏனெனில், தண்ணீா் உபரியாகவே வந்துள்ளதால் அனைத்து பாசன வாய்க்கால்களையும் முழுமையாக திறந்துள்ளோம். தேவைக்கேற்ப விவசாயிகள் தண்ணீரை திருப்பிக் கொள்ளலாம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com