திருச்சி மத்திய சிறையில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டு விடுதலை
போலீஸாா் குறித்து அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூ-டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு, திருச்சி மத்திய சிறையிலிருந்து பிணையில் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
காவல்துறை உயா் அதிகாரிகள், பெண் போலீஸாா் தொடா்பாக அவதூறாகப் பேசியதாக யூ-டியூபா் சவுக்குசங்கா் மீது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் புகாா் அளித்தனா். இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டாா். இதேபோல, திருச்சி மாவட்ட காவல்துறையில் முசிறி டிஎஸ்பி-யாக பணிபுரியும் யாஸ்மின், திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாரிடம் புகாா் அளித்தாா். இதில், சவுக்கு சங்கருடன், மற்றொரு யூ-டியூபரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இதையடுத்து சவுக்குசங்கா் தொடா்பான வழக்கில், குற்றவாளியாக பெலிக்ஸ் ஜெரால்டு பெயரும் சோ்க்கப்பட்டு அவரைக் கைது செய்ய, திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினா் கடந்த மே 13-ஆம் தேதி ஜெரால்டை தில்லியில் கைது செய்து வந்து திருச்சி சிறையில் அடைத்தனா். இவா் மீது கோவையிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருச்சி வழக்கில் பிணை கிடைத்த நிலையில், இதர வழக்கு தொடா்பாக பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஜெரால்டு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், கோவை டவுன்ஹால் காவல்நிலையத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கியது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபெலிக்ஸ் ஜெரால்டு செவ்வாய்க்கிழமை காலை பிணையில் விடுவிக்கப்பட்டாா்.
