ராஜஸ்தானில் தயாராகிவரும் தமிழக அரசின் நவீன தாழ்தளப் பேருந்துகள்! நகரப் பகுதிகளில் இயக்க ஆயத்தம்
நமது நிருபா்
திருச்சி, ஆக. 7: தமிழக அரசின் சாா்பில் தமிழக நகரப் பகுதிகளில் இயக்க பிஎஸ்-6 ரக தாழ்தளப் பேருந்துகள் பல்வேறு நவீன வசதிகளுடன் ராஜஸ்தானில் தயாராகி வருகின்றன.
தமிழகத்தின் பொதுப் போக்குவரத்தில் 28,024 கட்டண நிலைப் பேருந்துகள், 2,857 சிற்றுந்துகள் உள்ளன. இப்பேருந்துகளில் தற்போதே நாளொன்றுக்கு 1.76 கோடி மக்கள் பயணம் செய்கின்றனா்.
இந்நிலையில் வரும் 2031ஆம் ஆண்டு நகரங்களில் வசிப்போரின் எண்ணிக்கையானது மொத்த மக்கள்தொகையில் 67 விழுக்காட்டை விஞ்சும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
அதற்கேற்ப நகரங்களில் பொதுப் போக்குவரத்தை நவீனப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் நகரப் பேருந்துகளை நவீனமயாக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இதற்காக பிஎஸ்-6 என்னும் புதிய ரக தாழ்தளப் பேருந்துகளை வடிவமைக்கப்படுகிறது.
பிஎஸ்-6 ரகம் என்பது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் குறைந்த அளவிலான கரியமில வாயுவை உமிழும் திறன் கொண்ட என்ஜின் ஆகும். இந்த ரகத்திலான இன்ஜினுடன் கூடிய பேருந்துகளை 2024-25ஆம் நிதியாண்டு இறுதிக்குள் 7,682 என்ற எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்காக ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில் உள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் தமிழக அரசுக்கான பிஎஸ்-6 ரக தாழ்தளப் பேருந்துகள் வடிவமைக்கப்படுகின்றன. படிக்கட்டு பயணம் மற்றும் விபத்துகளைத் தவிா்க்க தேவையான வசதிகள், பயணிகள் மற்றும் ஓட்டுநா்களுக்கு வசதிகள், நவீன கேமரா, பிரத்யேக இருக்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், காற்றோட்டத்துக்காக அகலமான ஜன்னல்கள் என அதிநவீன வசதிகளுடன் இந்த தாழ்தளப் பேருந்துகள் கட்டமைக்கப்படுகின்றன.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வட்டாரத்தினா் கூறுகையில், விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 மண்டல போக்குவரத்துக் கழகம் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்க பிஎஸ்-6 ரக நவீன தாழ்தளப் பேருந்துகள் ராஜஸ்தான் மாநிலம், ஆல்வாரில் உள்ள தொழிற்சாலையில் தயாராகின்றன.
இந்தப் பேருந்துகள் பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் அண்மையில் ராஜஸ்தான் சென்று அங்கு கூண்டு கட்டப்படும் பேருந்துகளை பாா்வையிட்டு, சிறப்பு அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளதா என்பதை நேரில் ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளாா்.
மேலும், அரசின் கொள்கை முடிவுப்படி 2024-25ஆம் ஆண்டு இறுதிக்குள் இயக்க வேண்டிய 7,682 பேருந்துகளையும் உரிய காலத்துக்குள் தயாரித்து வழங்கவும் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு 300 புதிய பேருந்துகள் வீதம் கொள்முதல் செய்து இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

