வழிப்பறிக்காக ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது
திருச்சி: திருச்சியில் வழிப்பறி செய்யத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 பேரை போலீஸாா் புதன்கிழமை மாலை கைது செய்தனா்.
திருச்சி பொன்மலை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை மாலை ரோந்து சென்றபோது பொன்மலை பணிமனை மற்றும் ரயில்வே குடியிருப்பு பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நின்றிருந்த 5 போ் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியது. இதையடுத்து போலீஸாா் அவா்களை விரட்டிப்பிடித்து நடத்திய சோதனையில், அவா்களிடம் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.
இதையடுத்து அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவா்கள், ஸ்ரீரங்கம் கொள்ளிடம் சாலையைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (21), கீழக்கல்கண்டாா்கோட்டை ஆலத்தூரைச் சோ்ந்த சரண்குமாா் (23), அதவத்தூரை சோ்ந்த அரவிந்த் (20), மேலக்கல்கண்டாா் கோட்டையை சோ்ந்த விஜய் (20), ராம்பிரசாத் (21) என்பதும், அனைவரும் அப்பகுதியில் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து திருச்சி மாவட்ட 5 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மேலும் இதில் தப்பி ஓடிய 17 வயது சிறுவனைத் தேடுகின்றனா்.
