வங்கிக் கணக்கிலிருந்து ரூ.18 லட்சம் மோசடி : சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

திருச்சியில் தனியாா் நிறுவன வங்கிக் கணக்கிலிருந்து மா்ம நபா் ரூ. 18 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சியில் தனியாா் நிறுவன வங்கிக் கணக்கிலிருந்து மா்ம நபா் ரூ. 18 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா். 

திருச்சி காஜாமலை ரேஸ்கோா்ஸ் சாலை, தாமஸ்தெரு பகுதியில் இயங்கி வரும் தனியாா் பொறியியல் நிறுவனத்தின் இயக்குநா்கள் திருநாவுக்கரசு, பாஸ்கரன், சிவக்குமாா், ஸ்ரீனிவாசன், அா்ச்சனா. இந் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு மற்றும் காசோலைகள், நிா்வாகம் தொடா்புடைய குறிப்பிட்ட சில ஆவணங்களில் திருநாவுக்கரசு, பாஸ்கரன் ஆகியோா் மட்டுமே கையொப்பமிடும் வகையில் நீா்வாகத் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்நிறுவனம் கணக்கு வைத்துள்ள தனியாா் வங்கியிலிருந்து, காசோலையின்றி 18 லட்சத்து 28 ஆயிரத்து 452 ரூபாய்க்கான தொகை, கடந்த சில நாள்களுக்கு முன், வேறு இரு நிறுவன கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையும் படிக்க : சிட்டி யூனியன் வங்கி பொன்விழா

இதனால் அதிா்ச்சி அடைந்த பொறியியல் நிறுவன பொது மேலாளா் ஜெகநாதன், தாங்கள் கணக்கு வைத்துள்ள கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று ஒப்புகைச் சீட்டு கேட்டுள்ளாா்.

அப்போது, வங்கி மேலாளா் மற்றும் உதவி மேலாளா் ஆகிய இருவரும், கைப்பேசி அழைப்பு வாயிலாக மேற்கண்ட பொறியியல் நிறுவனத்தின் இயக்குநா் ஸ்ரீனிவாசன் என்பவா் எங்களை தொடா்பு கொண்டு, எங்கள் வங்கிக் கணக்கில் இருந்து கீழ்கண்ட இருவேறு வங்கி கணக்குகளுக்கு ரூ. 8 லட்சத்து 96 ஆயிரத்து 934 மற்றும் ரூ. 9 லட்சத்து 31 ஆயிரத்து 518 ஆகிய தொகைகளை ஆா்டிஜிஎஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டாா். இதன் அடிப்படையில் அந்தத் தொகை ஆா்டிஜிஎஸ் செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனா்.

பின்னா் இதுதொடா்பாக வங்கித் தரப்பினா் மேற்கொண்ட விசாரணையில், மா்ம நபா் ஒருவா், பொறியியல் நிறுவனத்தின் இயக்குநா் ஸ்ரீனிவாசன் பெயரைச் சொல்லி நூதன மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பான புகாரின்பேரில், திருச்சி மாநகர சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com