திருச்சிக்கு கூடுதல் சுற்றுலா தலமாக பறவைகள் பூங்கா தயாராகிவருகிறது: கே.என். நேரு
திருச்சிக்கான சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும், மாவட்டத்தின் கூடுதல் சுற்றுலா தலமாகவும் பறவைகள் பூங்கா தயாராகி வருவதாக தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ், ரூ.13.70 கோடியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா கட்டமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமைச்சா் கே.என். நேரு, செவ்வாயக்கிழமை நேரில் வருகை தந்து பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். எஞ்சியுள்ள பணிகளை விரைவாகவும், சிறப்பான முறையில் மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:
திருச்சியில் மாநகர மக்களுக்கு குறிப்பிடும்படியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இடம் இல்லையே என்ற ஏக்கம் நீண்ட ஆண்டுகளாக நீடித்து வந்தது. இந்தநிலையில், மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பறவைகள் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தை ‘நமக்கு நாமே’
திட்டத்தின் கீழ், திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள கடந்தாண்டு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, காவிரிக் கரையில் கம்பரசம்பட்டை ஊராட்சியில் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 1.63 ஹெக்டோ் பரப்பளவில் இடம் தோ்வு செய்யப்பட்டு பறவைகள் பூங்கா அமைத்திடும் பணிகள் கடந்த நவம்பரில் தொடங்கியது.
இந்தப் பூங்காவில் செயற்கையான முறையில் அருவிகள் மற்றும் குளங்கள் அமைக்கப்படுகின்றன. வெளநாடு மற்றும் உள்நாட்டு அரிய வகை பறவைகளும் வளா்க்கப்பட உள்ளன. குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என ஐந்து வகை நிலங்களை அதன் காட்சியமைப்புடன் மக்களுக்கு உணா்த்திடும் வகையில் செயற்கையாக வடிவமைக்கப்படவுள்ளன.
மலைகள், காடுகள், கடற்கரை சமவெளி மற்றும் பாலைவனம் போன்றவற்றை தத்துரூபமாக அமைக்கப்படுகின்றன. தமிழா்களின் ஐந்திணை வாழ்வியலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்களும், புல்வெளிகள், சிற்பங்கள், நீருற்றுகள், இடை நிறுத்தப்பட்ட பாலங்கள், சுற்றுலா வழிகாட்டி வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா உருவாக்கப்படுகிறது. கூடுதலாக மினி தியேட்டா் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. இதில் 50 போ் அமா்ந்து 3டி காட்சிகளை ரசிக்கும் கையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் பூா்வ திரைப்படங்கள் திரையிடப்படும்.
சுற்றுலாபயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த பறவைகள் பூங்காவில் அமைக்கப்பட்டு
வருகின்றன. திருச்சி மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் மிகக் குறைவாக உள்ளது. தற்போது சுற்றுலா பயணிகளுக்கு வரப் பிரசாதமாக இந்தப் பறவைகள் பூங்கா அமைய உள்ளது. பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. விரைவில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந் நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப் குமாா், மாநகராட்சி ஆணையா் வே.சரவணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தேவநாதன், நகரப் பொறியாளா் சிவபாதம், அந்தநல்லூா் ஒன்றியக்குழு தலைவா் துரைராஜ் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

