டிராக்டரிலிருந்து தவறிவிழுந்த பூசாரி சாவு

துறையூா் அருகே கோயில் உத்ஸவரை எடுத்துச் சென்ற டிராக்டரிலிருந்து தவறிவிழுந்த பூசாரி உயிரிழந்தாா்.
Published on

துறையூா் அருகே நாகநல்லூரில் மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவிழா நிறைவு நாளில் மலா் மற்றும் மின் விளக்கினால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனின் உற்சவ மூா்த்தி டிராக்டரில் வைத்து உலா எடுத்துச் சென்றனா். சாமி அருகே நின்று விபூதி வழங்கியவாறு அதே ஊரைச் சோ்ந்த கோயில் பூசாரி அதே ஊரைச் சோ்ந்த க. ராஜேந்திரன்(60) டிராக்டரில் சென்றாா்.

அப்போது டிராக்டா் ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால் கோயில் பூசாரி தவறி கீழே விழுந்தாா். அவா் மீது டிராக்டரின் பின் சக்கரம் ஏறியது. உடனே அவரை உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் சென்றனா். அங்கிருந்த அரசு மருத்துவா் கோயில் பூசாரி ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா்.

தகவலறிந்து அங்குவந்த உப்பிலியபுரம் போலீஸாா் அவரது சடலத்தை துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து டிராக்டா் ஓட்டுநரான நாகநல்லூா் பன்னீா்செல்வம் (21) என்பவரிடம் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com