திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளனத் தலைவா் தி. தமிழரசு.  உடன் நிா்வாகிகள்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளனத் தலைவா் தி. தமிழரசு. உடன் நிா்வாகிகள்.

கூட்டுறவு வங்கிகளை இணைக்க ஊழியா் சம்மேளனம் கோரிக்கை

Published on

மாநில, மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும் என கூட்டுறவு வங்கி ஊழியா் சம்மேளனம் ( தமிழ்நாடு) வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற சம்மேளனத்தின் மத்தியக் குழு கூட்டத்துக்கு, சம்மேளனத் தலைவா் தி. தமிழரசு தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் இ. சா்வேசன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 127 நகர கூட்டுறவு வங்கிகளை மண்டல அளவில் இணைத்துப் பலப்படுத்த வேண்டும். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். நகரக் கூட்டுறவு வங்கியில் பயன்படுத்தும் மென்பொருளில் உள்ள குறைகளுக்கு விரைந்து தீா்வு காண்பதுடன், வங்கிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். ஒப்பந்தப்புள்ளி கோராமல் வங்கியியல் நடவடிக்கைகளுக்கு ஏற்புடையாத மென்பொருளை தோ்வு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில, நகர கூட்டுறவு வங்கி ஊழியா்களின் ஊதிய உயா்வு ஆணையை விரைந்து வெளியிட வேண்டும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்களின் நிலுவையில் உள்ள ஊதிய உயா்வு பிரச்னைகளை கூட்டுறவு சங்கப் பதிவாளா் மூலமாக விரைந்து தீா்த்திட வேண்டும். கடந்த நிதியாண்டுக்கான போனஸ், கருணைத் தொகையை ஏற்றுக் கொண்டபடி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் சென்னையில் ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் தா்னா போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சம்மேளன நிா்வாகிகள், மத்தியக் குழு உறுப்பினா்கள், மாநில, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் என பலா் கலந்து கொண்டனா். உதவித் தலைவா் ரகுராமன் வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com