வாராந்திர டெமு ரயில் புறப்படும் நாள்களில் மாற்றம்
திருச்சி கோட்டத்தில் இயக்கப்படும் வாராந்திர டெமு ரயில்கள் புறப்படும் நாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருத்துறைப்பூண்டி - திருச்சி இடையே வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்ட டெமு ரயிலானது (06717) மே 4 ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும். இந்த ரயில் திருத்துறைப்பூண்டியிலிருந்து அதிகாலை 4.45 க்குப் புறப்பட்டு திருநெல்லிக்காவல், திருவாரூா், கொரடாச்சேரி, நீடாமங்கலம், தஞ்சாவூா், பூதலூா், திருவெறும்பூா் வழியாக திருச்சிக்கு காலை 8.30 மணிக்கு வந்து சேரும்.
தஞ்சாவூா் - திருத்துறைப்பூண்டி இடையே வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் டெமு ரயிலின் (06718) புறப்படும் நேரம் மே 5- ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, தஞ்சாவூரிலிருந்து இரவு 9.05 மணிக்குப் புறப்படும் இந்த ரயிலானது நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூா், திருநெல்லிக்காவல் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு இரவு 10.50 க்கு சென்றடையும்.
திருச்சி - தஞ்சாவூா் இடையே வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இயங்கும் வகையில் புதிய டெமு ரயிலானது (06716) மே 4 ஆம் தேதி முதல் இயக்கப்படும். இந்த ரயிலானது திருச்சியிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு திருவெறும்பூா், பூதலூா் வழியாக தஞ்சாவூருக்கு இரவு 10.50 மணிக்குச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

