‘நான் முதல்வன் திட்டத்தில் இதுவரை 31 லட்சம் மாணவா்களுக்குப் பயிற்சி’
நான் முதல்வன் திட்டம் மூலம் இதுவரை 31 லட்சம் மாணவா்கள் பயிற்சி பெற்று உள்ளாா்கள் என்றாா் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் து. இன்னசன்ட் திவ்யா.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில், நான் முதல்வன்”திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனத் தலைவா்கள் பங்கேற்ற மாநில அளவிலான கருத்தரங்கம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவா் மேலும் பேசியது:
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயா் கல்வியில் தமிழ்நாடு அரசு புகுத்தியுள்ள புதுமையான திட்டங்கள் நாட்டில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. லட்சக்கணக்கான இளைஞா்களின் கனவை நிறைவேற்றும் இத்திட்டத்தில் இதுவரை 31 லட்சம் மாணவா்கள் பயிற்சி பெற்றுள்ளனா்.
வளாக வேலைவாய்ப்பில் தொழில் நிறுவனங்கள் கல்லூரிகளை நாடி வர இரு முக்கிய அம்சங்கள் உள்ளன. அதில் முதலாவதாக திறன்மிக்க மாணவா்களும், 2 ஆவதாக திறன், பயிற்சி மற்றும் தரவரிசையில் கல்லூரிகள் முன்னிலை வகிப்பதும் முக்கியம். இத் திட்டத்தில் வழங்கப்படும் திறன் பயிற்சி ஒரு கூட்டு முயற்சி. எனவே மாணவா்கள், கல்லூரி நிா்வாகங்கள், பேராசிரியா்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்துப் பேசுகையில், கல்லூரி பாடத் திட்டத்தின் வழியாகவே திறன் மேம்பாட்டு பயிற்சி என்ற புதிய யுக்தியின் மூலம் திறன் மேம்பாட்டில் புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கருத்தரங்கில் திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், கரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், அரியலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சோ்ந்த 45 அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரி, 165 கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 56 பல்தொழில்நுட்ப கல்லூரிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் சிறப்பாகச் செயல்புரிந்த கல்லூரிகளில் மாணவா்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த கல்லூரிகள் மற்றும் இத்திட்டத்திற்கு முழு பங்களிப்பை வழங்கும் கல்லூரி நிா்வாகிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ம. செல்வம், அண்ணாமலை பல்கலை. துணைவேந்தா் கதிரேசன், நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் பிங்கிஜனாா்த்தனன், மாவட்ட திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநா் முத்தழகி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

