புள்ளம்பாடியிலிருந்து சென்னைக்கு மீண்டும் விரைவு சொகுசுப் பேருந்து
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடியிலிருந்து சென்னை கிளாம்பாக்கம் வரை செல்லும் புதிய அரசு விரைவு சொகுசுப் பேருந்தை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.
கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட புள்ளம்பாடியில் இருந்து சென்னை வழித்தடத்தில் இயங்கி வந்த அரசு விரைவுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு படுக்கை வசதியுடன் கூடிய புதிய விரைவு சொகுசுப் பேருந்து தொடக்க விழா புள்ளம்பாடிபேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக திருச்சி கிளை மேலாளா் வெங்கடேசன், கோட்ட மேலாளா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலையில் புதிய பேருந்தை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் புள்ளம்பாடி பேரூராட்சித் தலைவா் ஆலீஸ்செல்வராணி, ஒன்றியக் குழுத் தலைவா் ரசியா கோல்டன் ராஜேந்திரன், அரசு விரைவுப் போக்குவரத்து கழக தொமுச திருச்சி பணிமனை செயலா் ரெக்ஸ் டேவிட், பேரூராட்சி துணைத் தலைவா் இந்திராகாந்தி, திமுக நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

