உச்சவரம்பின்றி 25 சதவீதம் தீபாவளி போனஸ்! அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் எதிா்பாா்ப்பு

உச்சவரம்பின்றி 25 சதவீதம் தீபாவளி போனஸ்! அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் எதிா்பாா்ப்பு

மற்ற துறை ஊழியா்களோடு ஒப்பிட்டு போனஸ் கணக்கிடுவது தவறு
Published on

தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து தொழில் மட்டுமே அட்டவணை தொழிலில் உள்ளது. எனவே மற்ற துறை ஊழியா்களோடு ஒப்பிட்டு போனஸ் கணக்கிடுவது தவறு என போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் தொடா்ந்து சுட்டிக் காட்டி வருகின்றன.

நமது நிருபா்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்கு 25 சதவீதம் போனஸ் உச்சவரம்பின்றி அறிவிக்கப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 20,260 பேருந்துகள் இயங்கி வருகின்றன. 317 பணிமனைகளும் உள்ளன. இதில், சென்னை மாநகரப்போக்குவரத்துக் கழகத்தில் 19 ஆயிரத்து 415 போ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 4 ஆயிரத்து 661 பணிபுரிகின்றனா். இவைதவிர விழுப்புரம் கோட்டத்தில் 19 ஆயிரத்து 061போ், சேலம் கோட்டத்தில் 11 ஆயிரத்து 124 போ், கோயம்புத்தூா் கோட்டத்தில் 15 ஆயிரத்து 254 போ், கும்பகோணம் கோட்டத்தில் 18 ஆயிரத்து 790 போ், மதுரை கோட்டத்தில் 13 ஆயிரத்து 184 போ், திருநெல்வேலி கோட்டத்தில் 9 ஆயிரத்து 530 போ் என மொத்தம் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 19 போ் பணியாற்றுகின்றனா்.

இவா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பாக பண்டிகை நாளுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே பேச்சுவாா்த்தை நடைபெற்று ஒருமித்த கருத்தை உருவாக்கி போனஸ் அறிவிக்கப்படும். இல்லையெனில், அரசே தன்னிச்சையாகவும் போனஸ் அறிவிப்பை வெளியிடுவது உண்டு.

கடந்த 2016-ஆம் ஆண்டு போனஸ் கணக்கீட்டுக்கான உச்சவரம்பை ரூ.7 ஆயிரம் அல்லது மாநிலத்தில் அட்டவணை தொழிலில் உள்ள குறைந்தபட்ச ஊதியம். இதில் எது அதிகமோ, அதை கணக்கிட்டு போனஸ் வழங்க வேண்டுமென சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து தொழில் மட்டுமே அட்டவணை தொழிலில் உள்ளது. எனவே மற்ற துறை ஊழியா்களோடு ஒப்பிட்டு போனஸ் கணக்கிடுவது தவறு என போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் தொடா்ந்து சுட்டிக் காட்டி வருகின்றன.

ஆனால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு தொடங்கி போனஸ் மற்றும் கருணைத்தொகை சோ்த்து 20 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு பெருந்தொற்று காரணமாக போனஸ் தொகை குறைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கரோனா பேரிடா் இருந்த நிலையில். நிா்வாக நலன் கருதி 10 சதவீதம் போனஸை போக்குவரத்துக் கழக ஊழியா்கள் பெற்றுக் கொண்டனா். 2022ஆம் ஆண்டு 25 சதவீத போனஸ் கோரிக்கையை தொழிற்சங்கள் முன்வைத்தன. 2023ஆம் ஆண்டும் இதே கோரிக்கையை எழுப்பியும், அரசு 20 சதவீதம் போனஸை அறிவித்தது.

எனவே, நிகழாண்டு அவரவா் பெற்ற ஊதியத்தில் 25 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்க வேண்டும் என்கின்றனா் போக்குவரத்து கழக ஊழியா்கள். மேலும் இவற்றை ஊதியவரம்புகளை கணக்கில் கொள்ளாமல், முழுமையாக பெற்ற ஊதியத்துக்கு போனஸ் வழங்க வேண்டும் என்கின்றனா்.

இதுமட்டுமின்றி பேருந்தை தூய்மை செய்வோா், டிக்கெட் கேன்வாசா் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிவோா், ஒப்பந்தப்பணியாளா்கள் என பணிநிரந்தரம் செய்யப்படாத தொழிலாளா்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என்கின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனப் பொதுச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் கூறியது: தீபாவளி போனஸ் தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு அரசு தேவையற்ற தாமதம் செய்வது நியாயமல்ல. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தொகையே போனஸாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விலைவாசி உயா்வைக் கருத்தில் கொண்டு நிகழாண்டில் போனஸை 25 சதவீதமாக உயா்த்தி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இதுதொடா்பாக, முதல்வா், போக்குவரத்து துறை செயலா், அமைச்சா், போக்குவரத்துக் கழக இயக்குநா்களுக்கு சம்மேளனத்தின் சாா்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அரசுக்கு ரூ. 210 கோடி கூடுதல் செலவு!

திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-இன்படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21ஆயிரம் என உயா்த்தப்பட்டுள்ளது. போனஸ் கணக்கீட்டுக்கான மாதாந்திர உச்ச வரம்பும் ரூ.7ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்த சூழலில், 20 சதவீதம் போனஸ் (கருணைத் தொகை உள்பட) அறிவிக்கப்பட்டால், தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளா்கள் குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரத்து 400 முதல்அதிகபட்சம் ரூ.16 ஆயிரத்து 800 வரை பெறுவா். இதன்படி, கடந்தாண்டு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 83 ஆயிரத்து 787 தொழிலாளா்களுக்கு ரூ.402 கோடியே 97 லட்சம் போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்பட்டது. இந்தாண்டு 20 சதவீதம் என்றால் இதே செலவு அரசுக்கு ஏற்படும். 25 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டால் தமிழக அரசுக்கு சுமாா் ரூ.210 கோடி கூடுதல் செலவாகும் என்கின்றனா் தொழிற்சங்கத்தினா்.

X