ரௌடியின் உறவினா் வீட்டிலிருந்து ரூ. 18 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்
‘ஆபரேஷன் அகழி’ சோதனையில் ரௌடியின் உறவினா் வீட்டிலிருந்து ரூ. 18 லட்சத்து 92 ஆயிரம் ரொக்கம், ஆவணங்கள், தங்க நகைகளை போலீஸாரும், வருமான வரித்துறையினரும் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
‘ஆபரேஷன் அகழி’ சோதனையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள ரௌடி சாத்தனூா் அண்ணாமலைக்கு தொடா்புடைய அலுவலகம், அண்ணாமலையின் பினாமி சாத்தனூா் ராஜ்குமாா், அண்ணாமலையுடன் திருமணம் கடந்த உறவில் இருக்கும் கே.கே. நகா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த மீனாட்சி ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் திருச்சி மாவட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். தொடா்ந்து வருமான வரித்துறைக்கும் தகவல் அளித்தனா்.
தகவலின் பேரில் போலீஸாருடன் இணைந்து வருமான வரித்துறையினா், சாத்தனூா் ராஜ்குமாா் வீட்டில் சோதனையிட்டனா். இதில், 17 பத்திர ஆவணங்களும், மீனாட்சி வீட்டில் 10 பத்திர ஆவணங்களும், 70 பவுன் நகைகள், கணக்கில் வராத ரூ. 18 லட்சத்து 92 ஆயிரத்து 750 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
‘ஆபரேஷன் அகழி’ சோதனை குறித்து பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணா்வு காரணமாக பலா் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகியுள்ளனா். அதனடிப்படையில் 2, 3, 4- ஆவது பெயா் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சோதனைக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ‘ஆபரேஷன் அகழி’ சோதனையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தலைமறைவாக உள்ளவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா் என காவல் கண்காணிப்பாளா் வீ. வருண்குமாா் தெரிவித்துள்ளாா்.
