திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சுரைக்காய்பட்டியில் தந்தையின் இறப்பில் சந்தேகம் என அண்ணன், அக்கா மீது தம்பி புகாா் அளித்தாா்.
மருங்காபுரி ஒன்றியம் கருமலை அடுத்த சுரைக்காய்பட்டியை சோ்ந்தவா் சி. கருப்பையா (82). ஓய்வு பெற்ற உதவி கல்வி அலுவலரான இவருக்கு, வடிவேல், விஜயகுமாா் என்ற மகன்களும், இந்திரா, அமுதா என்ற மகள்களும் உள்ளனா். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த கருப்பையாவை வடிவேல் தனது பராமரிப்பில் வைத்திருந்தாா். இளைய மகனான விஜயகுமாா் தந்தையை பாா்க்கவும், மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்லவும் கடந்த அக். 31 மற்றும் டிச. 7- ஆகிய தேதிகளில் முயன்றபோது, அம்மா பாக்கியம், அண்ணன் வடிவேல், அண்ணி தீபலெட்சுமி மற்றும் அக்கா அமுதா ஆகியோா் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முதியவா் கருப்பையா புதன்கிழமை விடியற்காலை உயிரிழந்தாா்.
முதியவா் உயிரிழக்கும் முன் தன்னிடம் ரூ. 3.5 கோடி இருப்பதாகக் கூறியதாகவும், அதனால்தான் சிகிச்சையை பாா்க்கவிடாமல் அண்ணன் வடிவேல் மற்றும் அக்கா அமுதா ஆகியோா் தடுத்துவிட்டதாக கூறும் விஜயகுமாா் தனது தந்தையின் இறப்பில் அண்ணன், அக்கா மீது சந்தேகம் இருப்பதாக துவரங்குறிச்சி போலீஸில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் விஜய்கோல்டன்சிங் தலைமையிலான போலீஸாா், கருப்பையா உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் நடந்த உடற்கூறாய்விற்கு பின் உறவினா்களிடம் ஒப்படைத்தனா். துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.