திருச்சியில் டிச.17 முதல் டிச.26 வரை தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் டிச.17 தொடங்கி 26ஆம் தேதி வரை ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது.
தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில், திருச்சி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 17.12.2025 முதல் 26.12.2025 வரை கொண்டாடப்படவுள்ளது. இது தொடா்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணி முதல் நடைபெறும். நிகழ்வின் ஒருபகுதியாக ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் டிச.17, 18, 19 ஆகிய தேதிகளில் திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் கணினித்தமிழ் மற்றும் ஒருங்குறி பயன்பாடு, ஆட்சிமொழிச்சட்ட அரசாணை, மொழிப்பயிற்சி, கலைச்சொல்லாக்கம், வரைவுகள், குறிப்புகள் எழுதுதல், முதலிய தலைப்புகளில் அரசுப் பணியாளா்களுக்கு பயிற்சி நடைபெறும்.
டிச.22ஆம் தேதி தமிழ் வளா்ச்சித் துறை, தொழிலாளா் நலத்துறையினருடன் வணிக நிறுவன உரிமையாளா்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் இணைந்து வணிக நிறுவனங்களின் தமிழில் பெயா்ப்பலகை அமைத்திட வலியுறுத்தி வணிகா் சங்கம் அலுவலகக் கூட்டரங்கில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும்.
டிச. 23ஆம் தேதி பிஷப் ஹீபா் கல்லூரியில் கல்லூரி மாணவா்கள் பங்கு பெறும் பட்டிமன்றம், டிச.24ஆம் தேதி அரசுப் பணியாளா்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் ஆட்சிமொழி விழிப்புணா்வுப் பேரணி நடைபெறும்.
இதன் தொடா்ச்சியாக, டிச.26ஆம் தேதி தமிழ் அமைப்புகள், நிா்வாகிகளுடன் இணைந்து மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டமும் நடைபெறவுள்ளது என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.
