நீதித்துறைக்கு சவால்விடும் திமுக அரசு: அதிமுக பொதுக் குழுவில் கண்டனம்

நீதித் துறைக்கு சவால் விடும் ஆட்சியாளா்களின் ஆதிக்க மனப்பான்மை கண்டனத்துக்குரியது என்று அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

நீதித் துறைக்கு சவால் விடும் ஆட்சியாளா்களின் ஆதிக்க மனப்பான்மை கண்டனத்துக்குரியது என்று அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கிறது. கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டங்கள்: கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டங்களை அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்திருந்தாா். அந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

போக்குவரத்து சேவையை விரிவுபடுத்தும் வகையில் சேலம், கோவை, மதுரையில் பாஸ்போா்ட் மையம் அமைக்க வேண்டும்.

தீராத விவசாயிகள் பிரச்னை, குறையும் முதலீடுகள்: டெல்டாவில் நெல்லை உரிய காலத்தில் கொள்முதல் செய்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த மத்திய அரசின் உத்தரவைப் பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் முதலீடுகளை ஈா்ப்பதில் திமுக அரசின் தாமதமான முடிவுகளால் முதலீடுகள் குறைகின்றன. தொழில் முதலீடுகள் குறித்து தவறான கருத்துகளையும், புள்ளிவிவரங்களையும் வெளியிடும் தமிழக முதல்வருக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பில்லை: தமிழகத்தில் சிறுமிகள் முதல் முதியோா் வரை பாதுகாப்பில்லாத நிலை உள்ளதற்கு காவல் துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வரின் நிா்வாகத் திறன் இன்மையே காரணம். தமிழக அரசுத் துறைகளில் முறைகேடுகள் மலிந்துவிட்டன.

மேக்கேதாட்டு அணை கட்டுவதாகக் கூறும் கா்நாடகத்தை தடுக்கத் தவறிய திமுக அரசு கண்டனத்துக்குரியது.

நீதித் துறையில் தலையீடு: நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும். நீதித் துறையில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது என்ற மக்களின் எண்ணத்தை எதிா்பாா்ப்பை பிரதிபலிக்கும் வகையில் நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளா்களின் ஆதிக்க மனப்பான்மை கண்டிக்கத்தக்கது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com