மஞ்சப்பை, பசுமை சாம்பியன் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மஞ்சப்பை, பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் வே. சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அா்ப்பணித்த தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படுகிறது.
இதன்படி விருதுடன் தலா ரூ.1 லட்சம் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வைச் சிறப்பாக செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தை நேரில் அணுகலாம். விண்ணப்பங்களை வரும் ஜன.20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மஞ்சப்பை விருது: மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருள்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன கவா்கள் ஆகிய சுற்றுசூழலுக்கு உகந்த பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களைத் தோ்வு செய்து இந்த விருதானது வழங்கப்படும்.
3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். மேலும் முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசாக 3 லட்சம் வழங்கப்படும்.
விருதுக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரக இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கலாம். விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களில் தனிநபா் துறைத் தலைவா் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென்நகல்களுடன் மாவட்ட ஆட்சியருக்கு வரும் ஜன.15க்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
