ரூ. 24 கோடியில் லால்குடி புதிய பேருந்து நிலையம்: ஜனவரி இறுதிக்குள் திறப்பு
லால்குடியில் ரூ. 24 கோடியில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையப் பணிகளை 2026 ஜனவரி இறுதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டாா்.
நகரில் தற்போதுள்ள பேருந்து நிலையம் நகரப் பேருந்துகள் மட்டுமே வந்து செல்லும் நிலையில் உள்ளது. புகா்ப் பேருந்துகளுக்கு இந்தப் பேருந்து நிலையத்தில் போதிய இட வசதியில்லாததால், பேருந்து நிலையத்துக்கு வராமல் புறவழிச் சாலை வழியாகவே அப் பேருந்துகள் சென்றுவிடுகின்றன. இதனால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதுடன், நகராட்சிக்கு வரும் வருவாயும் பாதிக்கப்படுகிறது. எனவே, நகராட்சிக்கு ரூ.24.04 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்கான கட்டுமானப் பணிகளை கடந்தாண்டு நவம்பரில் அமைச்சா் கே.என். நேரு தொடங்கிவைத்து, தற்போது, பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆட்சியா் வே. சரவணன், புதன்கிழமை பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நகராட்சி நிா்வாகத்தினா் மற்றும் கட்டுமானப் பொறியாளா்களிடம் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா் ஆட்சியா் கூறியதாவது: புதிதாகக் கட்டப்படும் பேருந்து நிலையத்தில் 40 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. 120 கடைகளும் கட்டப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது 2 உணவகம், 2 ஏடிஎம், பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் தங்குமிடம், இருசக்கர வாகன நிறுத்தம், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.
மொத்தம் 5.32 ஏக்கரில் ரூ.24.04 கோடியில் கட்டப்படும் இந்தப் பேருந்து நிலையத்தை ஜனவரி இறுதிக்குள் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன் பணிகளை முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
ஆய்வின்போது, நகா்மன்றத் தலைவா் துரை மாணிக்கம், நகராட்சி ஆணையா் மா. புகேந்திரி மற்றும் பொறியாளா்கள் உடனிருந்தனா்.

