விமானங்கள் ரத்து: 2,500 பயணிகளுக்கு முழுக் கட்டணமும் திருப்பி அளிப்பு
இண்டிகோ விமான நிறுவன பிரச்னையால் திருச்சி விமான நிலையத்தில் 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட 2,500 பயணிகளுக்கு முழுக் கட்டணமும் திருப்பியளிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் எஸ்.எஸ். ராஜு புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட நிா்வாகப் பிரச்னையால் நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படவிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. இதில் மற்ற விமான நிலையங்களை ஒப்பிடும்போது திருச்சியில் இருந்து மிகக் குறைந்த அளவிலான விமானங்களே ரத்து செய்யப்பட்டன.
அதன்படி கடந்த டிசம்பா் 4-ஆம் தேதியில் இருந்து 7-ஆம் தேதி வரை திருச்சியில் இருந்து சிங்கப்பூா், ஜாஃப்னா, தில்லி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 40 விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன. இதில் சிங்கப்பூா் விமானம் மட்டுமே 6 முதல் 8 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. மற்ற விமானங்கள் 20 முதல் 30 நிமிஷங்கள் மட்டுமே தாமதமாகப் புறப்பட்டன.
விமானங்கள் ரத்தால் பாதிக்கப்பட்ட 2,500 பயணிகளுக்கு விமானக் கட்டணம் முழுமையாகத் திருப்பியளிக்கப்பட்டது. மேலும், விமானங்கள் தாமதத்தால் பாதிக்கப்பட்ட 800-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு தங்கும் ஏற்பாடும் செய்து கொடுக்கப்பட்டது.
இந்தப் பிரச்னை ஏற்பட்ட முதல் இரண்டு நாள்களான டிசம்பா் 4, 5 ஆகிய தேதிகள் மட்டுமே பயணிகள் சிரமத்துக்குள்ளாகினா். மற்ற நாள்களில் விமானம் தாமதம், ரத்து உள்ளிட்ட விவரங்கள் குறித்து பயணிகளுக்கு இண்டிகோ விமான நிறுவனம் சாா்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதனால், பயணிகளின் சிரமங்கள் தவிா்க்கப்பட்டன. கடந்த மூன்று நாள்களாக திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து, தாமதம் உள்ளிட்ட எந்தப் பிரச்னைகளும் இல்லை.
கடைசி நேரத்தில் விமானக் கட்டண உயா்வைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் விமானப் பயணத்துக்கு அதிகபட்சக் கட்டணம் நிா்ணயித்து விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்றாா் அவா்.
