அலுவலகங்களின் எண்ணிக்கை குறைப்பு - அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கையை குறைத்து, கிளை அலுவலகங்களை பிரதான அலுவலகத்துடன் இணைக்கும் நடவடிக்கையை எதிா்த்து அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்கம், தேசிய அஞ்சல் ஊழியா்கள் சங்கம், தபால்காரா் மற்றும் பன்முகத்திறன் ஊழியா்கள், அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியா்கள் சங்கம் ஆகியவை இணைந்து திருச்சி தலைமை தபால் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டத்தை நடத்தின.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய அஞ்சல் ஊழியா் சங்க கோட்டத் தலைவா் ஜி. அருணாசலம், தேசிய அஞ்சல் ஊழியா்கள் சங்க கோட்டத் தலைவா் என்.ஏ. அருண்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். திருச்சி கோட்டத்தில், சுப்பிரமணியபுரம், திருச்சி டவுன்ஹால், ஜெயங்கொண்டம் என மூன்று அலுவலகங்களை மூடி ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சில அலுவலகங்களையும் மூடிட தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, அஞ்சல் அலுவலகங்களை குறைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். வணிக இலக்கு நிா்ணயம் செய்து ஒவ்வொரு பணியாளா்களையும் நெருக்கடிக்கு ஆளாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கங்களின் நிா்வாகிகள் மற்றும் அஞ்சல் ஊழியா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

