அவ்வையாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான பெண்கள் அவ்வையாா் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையாா் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச மகளிா் தினமான மாா்ச் 8-ஆம் தேதி இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ரூ.1.50 லட்சம்
காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு தகுதியான திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பெண்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. விருது பெற 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், சமூக நலனைச் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீா்த்திருத்தம், மகளிா் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றும் மகளிா் விண்ணபிக்கலாம்.
இந்த விருதுக்கு இணையதளம் மூலம் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபா்கள் தங்களது கருத்துருகளை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திருச்சி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கருத்துரு குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 0431 213796 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
